கோலாலம்பூர்:
தேசிய தினக் கொண்டாட்டங்களில் நாட்டின் முன்னாள் பிரதமர்களுக்குத் தானாகவே உத்தியோகபூர்வ அழைப்பிதழ்கள் அனுப்பப்படுவதில்லை என்றும், இந்த நடைமுறை 2018-ஆம் ஆண்டு முதலே அமலில் உள்ளது என்றும் 2026-ஆம் ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டச் செயலகம் தெளிவுபடுத்தியுள்ளது.
நேற்று புத்ராஜெயா சதுக்கத்தில் நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டத்தில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கலந்துகொள்ளாதது குறித்து எழுந்த கேள்விகளைத் தொடர்ந்து, இச்செயலகம் இந்த விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2026 தேசிய மற்றும் மலேசிய தினக் கொண்டாட்டப் பணிக்குழுவின் தலைவரும் தகவல் தொடர்பு அமைச்சின் தலைமைச் செயலாளருமான டத்தோ அப்துல் ஹலீம் ஹம்சா கூறுகையில், கூட்டரசு அரசின் முக்கிய நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ் நடைமுறைகள் பிரதமர் துறையின் நெறிமுறை மற்றும் சர்வதேச மாநாடுகளின் செயலகப் பிரிவால் (BIUPA) நிர்வகிக்கப்படுகின்றன என்றார்.
“2018-ஆம் ஆண்டின் நடைமுறைப்படி, முன்னாள் பிரதமர்களுக்குத் தானாகவே அழைப்பிதழ் அனுப்பப்படுவதில்லை. எனினும், முன்னாள் தலைவர்கள் விழாவில் பங்கேற்பதற்கு எவ்விதத் தடையும் இல்லை. அவர்கள் விருப்பப்பட்டால் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின்படி விண்ணப்பித்து விழாவில் பங்கேற்கலாம்” என்று அவர் கூறினார்.
மேலும், துன் மகாதீர் ஆகஸ்ட் 28 முதல் 31 வரை வெளிநாட்டில் தங்குவதற்கான ‘வெளிநாட்டு ஓய்வுக்கால வசதி’ கோரி பிரதமர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்திருந்தார்.நாடாளுமன்ற உறுப்பினர்கள் (ஊதியம்) சட்டம் 1980 [சட்டம் 237]-இன் கீழ் முன்னாள் பிரதமர்களுக்கான விதிகளின்படி, அந்த விண்ணப்பத்திற்குப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புதல் அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.























