நேபாள நிலச்சரிவில் மலேசிய மலையேற்ற வீரர்கள் மாயம்: “மகன் முஹைமின் நிலை என்னவென்று தெரியவில்லை” – குடும்பத்தினர் கண்ணீர் பேச்சு!

கோலாலம்பூர்:

நேபாள நாட்டின் லங்தாங் பள்ளத்தாக்கில் (Langtang Valley) மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மாயமான 27 வயது மலேசிய இளைஞர் முஹமட் முஹைமின் அஷாத் நூர் ஹாடியின் நிலைக் குறித்து அவரது குடும்பத்தினர் மிகுந்த கவலையும் வேதனையும் அடைந்துள்ளனர்.

முஹைமின் மற்றும் அவருடன் சென்ற இரு நண்பர்களைத் தேடித் கண்டுபிடிக்கும் மீட்புப் பணிகள் குறித்த முறையான தகவல்கள் ஏதும் தங்களுக்குக் கிடைக்காதது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவரது தந்தை நூர் ஹாடி முகமட் ஹாசன் (62) தெரிவித்துள்ளார்.

கேலுகோர், தாமான் துன் சார்டனில் உள்ள தங்களது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நூர் ஹாடி, “எங்கள் மகன் எப்படி இருக்கிறான் என்பதை மட்டும் நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். நாட்கள் பல கடந்தும் தொடர்பில்லாததால், அவர்களுக்கு உணவு கிடைக்கிறதா, எப்படி உயிர்வாழ்கிறார்கள் என்பதே எங்கள் கவலை,” என்றார்.

சர்க்கரை நோய் பாதிப்பால் வலது காலை இழந்த மாற்றுத்திறனாளியான நூர் ஹாடி, தம்மை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது முதல் குடும்பத்தின் அனைத்துப் பொறுப்புகளையும் முஹைமினே கவனித்து வந்ததாகக் கூறினார்.

முஹைமினின் தாயார் சலேஹா அரிஃபின் (56) கண்ணீருடன் கூறுகையில், “பயணம் புறப்படுவதற்கு முன்பு வீட்டிற்குத் தேவையான பொருட்களை அதிகமாக வாங்கித் தந்தான். கிளம்பும்போது என்னிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டான். தாய் என்ற முறையில் என் மகன் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வீடு திரும்புவான் என இறைவனை வேண்டுகிறேன்,” என்றார்.

கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டபோது, முஹமட் முஹைமின், முஹமட் அதிப் ஹைக்கல் (27) மற்றும் முஹமட் சாகி ஒத்மான் (29) ஆகிய மூவரும் அந்தப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தனர். அதன்பின்னர் அவர்களிடம் இருந்து எந்தவொரு தொடர்பும் இல்லாததால் அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here