சனி கிரகத்தின் தென் துருவத்தில் 10 பக்கங்களை கொண்ட அலை வடிவம் கண்டுபிடிப்பு

வாஷிங்டன், நமது சூரியனை சுற்றி வரும் கிரகங்களில் 6-வதாக இருப்பது சனி(Saturn). இது சூரியனில் இருந்து சுமார் 142 கோடி கி.மீ. தூரத்தில் உள்ளது. சனி கிரகத்தின் தனிச்சிறப்பு அதன் அழகான வளையம். சூரிய குடும்பத்தில் உள்ள பிற கிரகங்களில் காணப்படாத ஒரு தட்டையான வளையம் சனி கிரகத்தின் நடுப்பகுதியை சுற்றி உள்ளது.

நமது பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர 365 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. அதனை நாம் ஒரு வருடமாக கணக்கில் கொள்வது போல், சனி கிரகம் ஒரு முறை சூரியனை சுற்றிவர 29 வருடங்கள் எடுத்துக் கொள்கிறது. பூமி தன்னைத்தானே சுற்றிவர 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. அதே சமயம், சனி கிரகம் தன்னைத்தானே சுற்றிவர 10 மணி நேரம் மட்டுமே எடுத்துக் கொள்கிறது.

சூரிய குடும்பத்தில் வியாழன்(Jupiter) கிரகத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கிரகமான சனி கிரகத்திற்குள், சரியாக 763 பூமிகளை அடக்கி விடலாம். இருப்பினும் சனியின் எடை, பூமியின் எடையை விட 95 மடங்குதான் அதிகம். சனி ஒரு வாயுக்கோளம். அதில் கடினமான உட்பகுதி மிகச்சிறியது. அதன் காற்று மண்டலத்தில் அமோனியா உறைந்து மேகக்கூட்டங்களாக இருப்பதால், கோளின் மேற்பரப்பு முழுவதும் பனிப்பிரதேசமாகவே காணப்படுகிறது.

1980-களில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’ அனுப்பிய ‘வாயேஜர்-1’ மற்றும் ‘வாயேஜர்-2’ விண்கலங்கள் சனி கிரகத்தை புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பின. அந்த புகைப்படங்களில், சனி கிரகத்தின் வட துருவத்தில் 6 பக்கங்களைக் கொண்ட(Hexagon) அலை வடிவம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், சமீபத்தில் ஹப்பிள் தொலைநோக்கி மூலம் சனி கிரகத்தை படம்பிடித்ததில், வட துருவத்தைப் போலவே சனி கிரகத்தின் தென் துருவத்திலும் அலை வடிவம் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது 10 பக்கங்களைக் கொண்ட(Decagon) அலை வடிவமாக உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த அலை வடிவம் சனி கிரகத்தின் வளிமண்டலத்தில் காணப்படுகிறது.

சனி கிரகத்தின் வட துருவத்தில் உள்ள அலை வடிவத்தை விட, தென் துருவத்தில் இருக்கும் அலை வடிவம் மிகப் பெரியதாகவும், நிலையானதாகவும் இருக்கிறது. 10 பக்கங்களைக் கொண்ட இந்த அலை வடிவத்தின் ஒரு பக்க நீளம் மட்டும் சுமார் 16,700 கி.மீ. வரை உள்ளது என தெரியவந்துள்ளது. இந்த வடிவம் 2017 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் உருவாகி இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அந்த காலகட்டத்தில் சனி கிரகத்தின் தென் துருவம் பூமியின் பார்வைக்கு எதிர்புறமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here