நான் உங்களுக்காக இருக்கிறேன்  -இந்தியச் சமூகத்திற்கு பிரதமர் அன்வார் உறுதி; தொடர் நடவடிக்கைகள் அவசியமென அமைச்சர் ரமணன் வலியுறுத்தல்

வறுமை, கல்வி, பொருளாதார வாய்ப்புகள் மற்றும் குடியுரிமை உள்ளிட்ட மலேசிய இந்தியச் சமூகத்தைப் பாதிக்கும் முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கம் எப்போதும் துணைநிற்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பகிரங்க உறுதி அளித்துள்ளார். நேற்று புத்ராஜாயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்தியச் சமூகத் தலைவர்களின் கருத்துகளையும் கவலைகளையும் நேரடியாகக் கேட்டறிந்த பின்னர், பிரதமர் இந்தச் சுருக்கமான ஆனால் தீர்க்கமான செய்தியை வெளிப்படுத்தினார்.

வெறும் கோரிக்கைகளைக் கேட்பதோடு நின்றுவிடாமல், முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் உடனடியாகச் செயல்பாட்டிற்கு வர வேண்டும் என்பதில் பிரதமர் உறுதியாக உள்ளார். அரசாங்கத்தின் திட்டங்கள், உதவிகள் மற்றும் மானியங்கள் தேவையான மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய, சம்பந்தப்பட்ட அமைச்சகங்களும் முகமைகளும் உரிய கவனம் செலுத்தி சேவை விநியோகத்தை மேம்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒன்பது இந்தியர் வர்த்தகச் சபைகள் மற்றும் 14 அரசு சாரா இந்தியர் நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்ட இச்சந்திப்பு, இந்தியச் சமூகத்தின் பல்வேறு விவகாரங்களை அரசாங்கத்தின் மிகயுயர் மட்டத்திற்கு நேரடியாகக் கொண்டு செல்ல வழிவகுத்தது. கல்வி மற்றும் திறன் பயிற்சி வாய்ப்புகள், வேலைவாய்ப்பு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான நிதி உதவி, நலத்திட்டம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவை இச்சந்திப்பில் முக்கியமாக விவாதிக்கப்பட்டன. மேலும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வறுமை ஒழிப்பு மற்றும் குடியுரிமைப் பதிவுகள் தொடர்பாகவும் பேசப்பட்டது.

மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவின் (மித்ரா) பங்களிப்பை வலுப்படுத்துதல், தொழில்முனைவோர் மற்றும் தொழில்நுட்ப-தொழில் பயிற்சி (திவெட்) வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், வழிகாட்டித் திட்டங்கள் மூலம் இளைஞர் மேம்பாட்டை ஊக்குவித்தல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்பட்டது. பிரதமருடனான இச்சந்திப்பு இரண்டாவது முறையாக நடைபெறுகிறது. இம்முறை பிரச்சினைகளை அடையாளம் காண்பதிலிருந்து, சாத்தியமான தீர்வுகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை நடவடிக்கைகளையும் தீர்மானிக்கும் நிலைக்குப் பேச்சுவார்த்தை நகர்ந்துள்ளது.

*அமைச்சர் ரமணன்: குரல் கொடுத்த விவகாரங்களுக்கு உடனடி நடவடிக்கை தேவை*

இந்தியச் சமூகத் தலைவர்களைப் பிரதமர் நேரடியாகச் சந்தித்து உரையாடியது, இச்சமூகத்தின் மேம்பாட்டு முன்முயற்சிகளுக்கு அரசாங்கம் அளிக்கும் உயர்மட்ட முக்கியத்துவத்தை நிருபிப்பதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். இச்சந்திப்பிற்குப் பிறகு தொடர் நடவடிக்கைகளே மிக முக்கியம். முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் வெறும் குறிப்புகளாகவோ அல்லது விவாதங்களாகவோ மட்டும் நின்றுவிடக் கூடாது. ஒவ்வொரு விவகாரமும் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு, மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் நடவடிக்கைகளாக மாற்றப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள், வரவிருக்கும் 2027 வரவுசெலவுத் திட்ட தயாரிப்பின் போது கவனத்தில் கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசாங்கத்தின் திட்டங்கள் குறிப்பிட்ட இலக்குக் குழுவைச் சென்று அடைவதே உண்மையான வெற்றி என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பிரதமர் இந்தியச் சமூகத்திற்குத் தகுந்த உறுதிமொழியை அளித்துள்ளார். அதனைச் செயல்பாடுகள் மற்றும் நற்பலன்கள் வழியாக மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதே நமது தற்போதைய பொறுப்பாகும்,” என ரமணன் மேலும் கூறினார். இந்நிகழ்வில் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் மற்றும் மித்ரா தலைமை இயக்குநர் கே. ரவீந்திரன் நாயர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here