கோலாலம்பூர்:
கேசாஸ் (Kesas) நெடுஞ்சாலையின் கிள்ளான் மற்றும் கோலாலம்பூர் வழித்தடத்தில் நேற்று பிற்பகலில் பனி படர்ந்துள்ளது போன்ற தோற்றத்தைக் கொடுத்த வெண்மை நிறப் பகுதி, கடந்த வாரம் நிகழ்ந்த சோப்பு பொருள் கசிவு எச்சங்கள் பெருமழையால் மீண்டும் பொங்கி எழுந்ததால் ஏற்பட்டது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதியன்று கோத்தா கெமுனிங் வளைவுப் பகுதியில் கசிந்த சோப்புப் பொருட்களைத் தீயணைப்புத் துறையினர் மரத்தூள் கொண்டு சுத்தம் செய்திருந்த போதிலும், நேற்று பெய்த கனமழையால் எஞ்சியிருந்த எச்சங்கள் 500 மீட்டர் தூரத்திற்கு நுரையாகப் பரவியுள்ளது என்று ஷா ஆலம் மாவட்டக் காவல் துறைத் தலைவர்துணை ஆணையர் சாருடின் சாமா தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிய இந்த விசித்திரக் காட்சியால் சாலை பயனீட்டாளர்களுக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடையே குறிப்பாக மோட்டார் சைக்கிள் ஓட்டிகளிடையே எழுந்துள்ள நிலையில், நெடுஞ்சாலை நிர்வாகம் உடனடியாக இரண்டாம் கட்டத் தூய்மைப்படுத்தும் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.























