வங்கியிலிருந்து 2 லட்சம் ரிங்கிட்டை மீட்டு கொண்டு காரில் பயணம் சென்ற ஆடவர் ஒருவர் அதனை சாலைச் சந்திப்பு ஒன்றில் அநியாயமாக கொள்ளையர்களிடம் பறிகெகாடுத்தார்.
ஷா ஆலம் சாலைச் சந்திப்பு ஒன்றில் நேற்று நடந்த அந்தப் பகீர் கொள்ளைச் சம்பவம் பற்றிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து அந்தச் செய்தி பரபரப்பானது. மற்றொரு வாகனத்திலிருந்த கார் கேமராவில் அந்த திகில் கொள்ளைச் சம்பவம் பதிவானது. பெரோடுவா கெம்பாரா வானத்தை ஓட்டி வந்த ஆடவரை. பெரோடூவா அல்ஸா காரில் வந்த கொள்ளைக் கும்பல் சாலைச் சந்திப்பில் வழி மறித்தது.
அதனைத் தொடர்ந்து ஒரு மோட்டார்சைக்கிளில் அந்த கெம்பாரா காரை நெருங்கிய இரண்டு ஆடவர்கள் கோடாரியால் அந்தக் காரின் ஓட்டுநர் பகுதி கண்ணாடியை உடைத்து அந்தக் காரின் இயக்கத்தை நிறுத்தியதோடு அந்த ஆடவர் அங்கிருந்து தப்பி ஓடாதிருக்க காரின் சாவியையும் பறித்தனர்.
அதே சமயத்தில் அல்ஸா வாகனத்தின் முன் பக்க பயணி இருக்கையில் இருந்து இறங்கி வந்த ஒரு நபர் 2 லட்சம் ரிங்கிட் அடங்கிய பணப்பையை கெம்பாரா காரிலிருந்து அபகரித்தான். பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் அகன்று சென்றது, பணத்தைப் பறிகொடுத்த 54 வயது உள்ளுர் ஆடவர் பின்னர் இதுபற்றி காவல்துறையில் புகார் செய்தார்.




















