மலேசிய மருத்துவச் சங்கத்தின் (MMA) புதிய தலைவராக பொறுப்பேற்றிருக்கும் டாக்டர் சிவனேசன் லட்சுமணன் தனது தலைமையின் மருத்துவர்களை தக்க வைத்து கொள்வதே முதன்மை முன்னுரிமையாக இருக்கும் என்று தெரிவித்தார். குடும்ப மருத்துவ நிபுணரான சிவனேசன், இச்சங்கத்தின் சிலாங்கூர் பிரிவுத் தலைவராகவும் தனியார் மருத்துவப் பயிற்சியாளர்கள் பிரிவின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளார் என்று எம்எம்ஏ தெரிவித்துள்ளது. நேற்று ஈப்போவில் நடைபெற்ற எம்எம்ஏவின் வருடாந்திர விருந்து நிகழ்ச்சியில் பேசிய சிவனேசன், வயதான மக்கள் தொகை, தொற்றில்லா நோய்களின் அதிகரிப்பு காரணமாக சுகாதாரச் சேவைகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்களைத் தக்கவைப்பது மிக முக்கியம் என்று கூறினார்.
மருத்துவப் பட்டதாரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாகாது என்றும், தொழில் வளர்ச்சி, பணிச் சூழல், தொழில்முறை மேம்பாடு மற்றும் சிறப்பு அல்லது துணை-சிறப்பு மருத்துவப் பிரிவுகளில் நிபுணத்துவம் பெறுவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரு மருத்துவருக்குப் பயிற்சி அளிக்கப் பல ஆண்டுகளும் கணிசமான முதலீடும் தேவைப்படுகின்றன. அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் பொது சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறும்போது, அவர்களின் அனுபவம், நிபுணத்துவம், தொடர்ச்சியான மருத்துவச் சேவை ஆகியவற்றை நாம் இழக்கிறோம் என்று அவர் கூறினார்.
சிறப்பு, துணை-சிறப்பு மருத்துவப் பிரிவுகளில் நிபுணத்துவம் பெற விரும்பும் மருத்துவர்களுக்குத் தெளிவான மற்றும் கணிக்கக்கூடிய வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் சிவனேசன் வலியுறுத்தினார். இது திறமையானவர்களைத் தக்கவைப்பதோடு, தொழில் வளர்ச்சி, பணியாளர் திட்டமிடலுக்கும் உதவும் என்று அவர் கூறினார். தனியார் சுகாதாரத் துறை குறித்துப் பேசிய அவர், மூன்றாம் தரப்பு நிர்வாக அமைப்புகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் தொடர்பான விவகாரங்களில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் எம்எம்ஏ தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள 11,000-க்கும் மேற்பட்ட தனியார் பொது மருத்துவர்களை தொற்றா நோய்களைத் தடுப்பதிலும், கண்டறிவதிலும், நிர்வகிப்பதிலும் அரசாங்கம் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஏனெனில், நோயாளிகள் இவர்களை எளிதாக அணுக முடிகிறது. சுகாதார அமைச்சகத்தின் “ஒரு நபர், ஒரு பதிவு” எனும் டிஜிட்டல் மருத்துவப் பதிவுத் திட்டம் சில மாதங்களில் அமலுக்கு வரவுள்ள நிலையில், இது பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலான வலுவான ஒத்துழைப்பைச் சாத்தியமாக்கும் என்று சிவனேசன் கூறினார்.
டிஜிட்டல் சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 650 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 1 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டிருப்பது, இத்திட்டத்தைச் செயல்படுத்துவதை விரைவுபடுத்தக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். நாள்பட்ட நோய்களுக்கான மேலாண்மை, மறுவாழ்வு, நீண்டகாலப் பராமரிப்பு, பிற ஆதரவு சேவைகளை வலுப்படுத்துவதன் மூலம், வயதான மக்கள் தொகை பெருக்கத்திற்கு மலேசியா தயாராக வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சரவாக்கின் உலு பாரம் பகுதியில் உள்ள லாங் லெல்லாங் விமான நிலையத்திற்கு அருகே செப்டம்பர் 8ஆம் தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து சிவனேசன் வருத்தம் தெரிவித்தார்; இந்த விபத்தில் ‘பறக்கும் மருத்துவர் சேவை’ பணியில் ஈடுபட்டிருந்த நான்கு சுகாதாரப் பணியாளர்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். தொலைதூரப் பகுதிகளில் உள்ள சமூகங்களுக்குச் சேவையாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் அபாயங்களை இந்தத் துயரச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகக் கூறிய அவர், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள், வளங்கள், ஆதரவு ஆகியவை அவசியமென்றும் வலியுறுத்தினார்.









