கோலாலம்பூர்:
தம்பினிலுள்ள தாமான் இண்டா வீடமைப்புப் பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், 63 வயது முதியவர் ஒருவர் தீயிலிருந்து தப்ப முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இன்று காலை 7.10 மணியளவில் தம்பின் மாவட்டக் காவல் தலைமையகத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு இச்சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்துள்ளதாகத் தம்பின் மாவட்டக் காவல் துறைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் அமீருடின் சாரிமான் தெரிவித்தார்.
மூன்று மலேசியர்கள் வசித்து வந்த அந்த ஒற்றை மாடித் மொட்டை மாடி வீட்டில் அதிகாலை 6.15 மணியளவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோதே இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
“வீட்டிலிருந்தவர்களில் ஒருவருக்குத் திடீரெனப் புகை வாசனை வந்துள்ளது. அதனையடுத்து வீட்டார் உடனடியாக விழித்துக் கொண்டனர். எனினும், வீட்டின் பின் அறையிலிருந்த 63 வயது முதியவரால் தீயின் பிடியிலிருந்து தப்பி வர முடியாமல் போனதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.” என்று அவர் சொன்னார்.
இத்தீ விபத்து மின் கசிவு காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் நம்பப்படுகிறது என்றும், இதுவரை இதில் எவ்விதக் குற்றவியல் பின்னணியும் கண்டறியப்படவில்லை என்றும் அமீருடின் சாரிமான் மேலும் கூறினார்.
















