கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் 18 வயது இளைஞரின் சடலம் மீட்பு: 4 பேர் அதிரடி கைது!

கோத்தா பாரு:

இங்குள்ள தாமான் தேசா குஜித், கம்போங் போக் போ பகுதியில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த 18 வயது அகதி இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, நால்வரைப் பிடித்துக் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று (செப்டம்பர் 19) அதிகாலை 12.12 மணியளவில், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சுயநினைவின்றிய நிலையில் கிடந்த இளைஞரின் சடலம் குறித்துக் கோத்தா பாரு மாவட்டக் காவல் துறைக்கு அவசரத் தகவல் கிடைத்துள்ளதாகக் கிளந்தான் மாநிலக் காவல் துறைத் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் மாமட் தெரிவித்தார்.

ஆரம்ப கட்ட விசாரணையில், இக்கொலைச் சம்பவம் தாமான் தேசா குஜித்திலுள்ள முஸ்லிம் மயானத்திற்கு அருகேயுள்ள தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் நடைபெற்றுள்ளதாகக் காவல் துறை சந்தேகிக்கிறது.

“கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பாஞ்சி பகுதியிலுள்ள தாமான் டேசா குஜித்திலுள்ள வீடொன்றில் காவல் துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது 22 முதல் 38 வயதுக்குட்பட்ட சீன ஆண் ஒருவர், இரண்டு மியன்மார் ஆண்கள் மற்றும் ஒரு மியன்மார் பெண் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர்” என்று அவர் சொன்னார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து ஒரு மிட்சுபிஷி ட்ரைட்டன் ரக வாகனம் மற்றும் நான்கு கைப்பேசிகளையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பரிசோதனையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்குக் குற்றப் பின்னணி எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்துக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 (கொலை வழக்கு) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர்கள் நால்வரும் வரும் செப்டம்பர் 25 வரை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இக்கொலைச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சாட்சிகள் அல்லது பொதுமக்கள் உடனடியாகக் கோத்தா பாரு மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு (09-7752200) அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு விசாரணைக்கு உதவுமாறு காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here