டுரியான் துங்கால் அணையில் மர்ம மரணம் – கொலை வழக்காக பதிவு

( ரெ.மாலினி)

மலாக்கா:

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாச்சாப் பாருவில் உள்ள டுரியான் துங்கால் அணைக்கட்டு நீர்த்தேக்கப் பகுதி அருகே, சிமெண்டால் நிரப்பப்பட்ட தோம்பில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு மற்றும் மண்டையோடு கொலை செய்யப்பட்ட நபருடையது என போலீஸ் உறுதி செய்துள்ளது.

போலீஸ் மேற்கொண்ட ஆரம்பகட்ட பிரேதப் பரிசோதனையில், கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் மற்றும் மண்டையோடு மனிதனுடையவை என்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும், தோம்பின் உள்ளே பாதிக்கப்பட்ட நபருடைய ஆடைகள்துணி, சட்டை மற்றும் கால்சட்டை உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலோர் காஜா மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்பரிண்டெண்ட் அஹ்மட் அபு பக்கார் கூறுகையில், இந்தச் சம்பவம் தற்போது கொலை வழக்காக வகைப்படுத்தப்பட்டு, குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

எனினும், இறந்தவரின் பாலினம் மற்றும் மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும் அதில் இருந்த துணிகளை காணும் போது அந்த எழும்புக் கூடு ஆணாக இருக்கும் என நம்ப்படுகிறது.
தொடர்ந்து நடைபெறும் பிரேதப் பரிசோதனையின் முழுமையான அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 11.40 மணியளவில், அணைக்கட்டு அருகே மூன்று மீனவர்கள் நீல நிற தோம்பு ஒன்று சாலையிலிருந்து சுமார் 15 மீட்டர் தொலைவில் இருப்பதைக் கண்டு சந்தேகமடைந்தனர். தோம்பின் உள்ளே என்ன இருக்கிறது என்பதை அறிய அதன் ஒரு பகுதியை வெட்டிப் பார்த்தபோது, எலும்புகளைப் போன்ற பொருட்கள் இருப்பதை அவர்கள் கவனித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரின் ஆரம்ப சோதனையில், தோம்பின் மேற்பகுதியில் சிமெண்ட் தடயங்கள் காணப்பட்டதுடன், மண்டையோடு தனியாக பிரிந்த நிலையிலும், எலும்புகளில் எந்தத் திசுவும் ஒட்டாத நிலையிலும் இருந்தது.

பின்னர், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரின் உதவியுடன் அந்த தோம்பு சாலைக்குக் கொண்டு வரப்பட்டு, மேலதிக பரிசோதனை மற்றும் பிரேதப் பரிசோதனைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here