சரவாக் மிரி நகரில் பகீர் சம்பவம்: சிறுமியைத் தாக்கிய 7 சிறுவர் சிறுமிகளை அடையாளம் கண்டது காவல்துறை!

கோலாலம்பூர்:

சரவாக், மிரி நகரின் துடான் டேசாராஸ் பகுதியில் உள்ள திறந்தவெளியில் சிறுமி ஒருவரை நண்பர்கள் குழுவினர் கூட்டுச் சேர்ந்து தாக்கி பகடிவதை செய்யும் 44 வினாடிகள் கொண்ட காணொளி முகநூலில் பரவி வைரலானது.

இந்த அதிர்ச்சி சம்பவத்தில் தொடர்புடைய சிறுவர் சிறுமிகள் அனைவரையும் காவல் துறையினர் அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை மாலை 5.00 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக மிரி மாவட்டக் காவல் துறைத் தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் முகமட் ஃபர்ஹான் லீ அப்துல்லா கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியதால் ஆத்திரமடைந்த 8 முதல் 13 வயதுடைய அவரது 7 நண்பர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகத் விசாரணையில் தெரியவந்துள்ளது.

“இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாகப் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு எவ்விதக் காயங்களும் ஏற்படவில்லை. இருப்பினும், காணொளியில் பதிவாகியுள்ள தாக்குதல் குறித்துக் காவல் துறை விரிவான விசாரணை நடத்தி வருகிறது.”என்று அசிஸ்டென்ட் கமிஷனர் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாகக் குற்றவியல் சட்டப் பிரிவு 323-இன் கீழ் (தன்னிச்சையாகக் காயம் விளைவித்தல்) வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தாக்குதலில் ஈடுபட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here