கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் சிறையிலிருந்து தனது வீட்டுக்கு மாற்றப்படும் சூழலில், பாதுகாப்பு ஏற்பாடுகளை முறைப்படுத்துவதற்காகக் கோலாலம்பூரிலுள்ள அவரது லங்காட் டூத்தா இல்லத்திற்கு அருகில் நாளை காலை 7:00 மணி முதல் நடமாடும் காவல் நிலையம் அமைக்கப்பட்டவுள்ளது.
“இந்த நடமாடும் காவல் நிலையம் டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு 24 மணி நேரப் பாதுகாப்பு வழங்குவதற்காக அமைக்கப்படவில்லை. அவர் வீட்டிற்குத் திரும்பும் போது ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அண்டை வீட்டாரின் வருகையால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் மட்டுமே இது பயன்படுத்தப்படும்.” என்று செந்தூல் மாவட்டக் காவல் துறைத் தலைவர் (OCPD) உதவி ஆணையர் அனுவார் பக்ரி அப்துல் சலாம் கூறினார்.
நஜிப் வீட்டுக்காவலில் வைக்கப்படும் பட்சத்தில் அவரைக் கண்காணிக்கும் முழுப் பொறுப்பும் மலேசியச் சிறைத்துறைக்கே உரியது என்றும், அரச மலேசியக் காவல் துறை (PDRM) அவரது நகர்வுகளுக்கு உதவி செய்து ஊடகங்களின் பாதுகாப்பை மட்டுமே உறுதி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, நேற்றைய தினம் (செப்டம்பர் 19) 4 சிறைத்துறை அதிகாரிகள் நஜிப்பின் இல்லத்திற்குச் சென்று முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியத்தின் பரிந்துரையின் பேரில், மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நஜிப்பிற்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பை வழங்கினார். இதன் மூலம், RM50 மில்லியன் அபராதத்தைச் செலுத்துவதற்கு உட்பட்டு, வரும் ஆகஸ்ட் 23, 2028 வரை அவர் தனது எஞ்சிய தண்டனையைக் காஜாங் சிறைக்குப் பதிலாக வீட்டுக்காவலில் அனுபவிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
எனினும், லங்காட் டூத்தா இல்லம் தான் வீட்டுக்காவலுக்கான அதிகாரப்பூர்வ இடமாக உறுதி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்த அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ அறிவிப்பு இன்னும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.























