கோலாலம்பூர்:
தும்பாட், கொக் மஜித் படகுத்துறை அருகே தாய்லாந்து இமாம் ஒருவரின் மனைவியின் வெள்ளை நிற ஹோண்டா சிட்டி கார் சேதப்படுத்தப்பட்டது குறித்துக் காவல் துறைக்கு அதிகாரப்பூர்வப் புகார் கிடைத்துள்ளது.
இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய தும்பாட் மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் முகமட் கைரி ஷாஃபி, நேற்று முன்தினம் இரவு 7.10 மணியளவில் 30 வயதான அந்த இமாம் கொக் மஜித் படகுத்துறை அருகே காரை நிறுத்திவிட்டு, பூலாவ் பெலூரு மசூதிக்கு இஷா தொழுகைக்காகச் சென்றுள்ளார் எனக் கூறினார்.
தொழுகை முடிந்ததும் இரவு 9.36 மணியளவில் அவர் திரும்பி வந்து பார்த்தபோது, அவரது கார் மீது சாயம் பூசப்பட்டுச் சேதப்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
“தும்பாட் தீவுப்பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோதக் குடியேறிகள் கடத்தல் தொடர்பாக அதிகாரிகளுக்குத் தகவல் அளித்ததால் இமாமுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவரது நண்பர் ஒருவர் அனுப்பிய ‘ஸ்கிரீன்ஷாட்’ தகவல் மூலம் தெரியவந்துள்ளது. இருப்பினும், அந்த குற்றச்சாட்டுகளைப் புகாரளித்தவர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.” என்று, முகமட் கைரி ஷாஃபி கூறினார்.
இச்சம்பவம் குறித்துக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 427-இன் கீழ் (சேதத்தை ஏற்படுத்துதல்) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இமாமுக்கு வந்த அச்சுறுத்தல் செய்திக்கும் இந்தச் சம்பவத்திற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் காவல் துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.






















