ஈப்போவில் சாலைச் சோதனையை தவிர்க்க போக்குவரத்துக் காவல் துறை அதிகாரியை மோதித் தள்ளிய கார் ஓட்டுநர் கைது!

கோலாலம்பூர்:

காவல் துறையின் வீதிச் சோதனையிலிருந்து தப்ப முயன்று, போக்குவரத்துக் காவல் துறை அதிகாரி மீது காரை மோதித் தள்ளி, எதிர்த்திசையில் காரை இயக்கிய 29 வயது வாலிபரை ஈப்போ காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

காரைக் கழுவும் இடத்தில் பணிபுரியும் அந்த நபர், இன்று (செப்டம்பர் 24) காலை தாமான் விங் ஓன் அருகே உள்ள போக்குவரத்துச் சந்திப்பில் தனது காரை மோதி விபத்துக்குள்ளாக்கியதை அடுத்துக் கைது செய்யப்பட்டதாக ஈப்போ மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் முகமட் நஜீப் ஹம்ஸா தெரிவித்தார்.

இன்று காலை 9.45 மணியளவில் ஜாலான் சிலிபினில் நடைபெற்ற வீதிச் சோதனையின் போது, அந்த நபரை காரை நிறுத்துமாறு காவல்துறையினர் உத்தரவிட்டனர். ஆனால் அவர் காரை நிறுத்தாமல் அதிவேகமாகத் தப்பிச் சென்றுள்ளார்.

“இதையடுத்து, மூன்று போக்குவரத்துக் காவலர்கள் மோட்டார் சைக்கிள்களில் அவரைப் பின்தொடர்ந்தனர். ஜாலான் பாங்லிமா புகித் காத்தாங் வஹாப்பில் உள்ள பேராக் டாருல் ரிட்சுவான் கட்டிடத்திற்கு முன்னால் உள்ள போக்குவரத்துச் சந்திப்பை அடைந்தபோது, அவர் திடீரென ‘யு-டர்ன்’ செய்தார். அப்போது, பின் தொடர்ந்த காவலர்களில் ஒருவர் மீது காரை மோதிவிட்டு, ஜாலான் கோலா கங்சார் நோக்கி அதிவேகமாகத் தப்பினார்” என்று அவர் சொன்னார்.

கார் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் ஏறி, எதிர்த்திசையில் ஆபத்தான முறையில் காரைச் செலுத்திய அந்த நபர், இறுதியில் ஜாலான் கோலா கங்சார் போக்குவரத்துச் சந்திப்பு அருகே விபத்துக்குள்ளானார். இச்சம்பவம் தொடர்பான 17 விநாடி காணொளி ‘திரெட்ஸ்’ (Threads) சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கைது செய்யப்பட்ட நபரிடம் ஓட்டுநர் உரிமம் (Driving licence) இல்லை என்றும், அவர் ஓட்டி வந்த காரின் சாலை வரி (Road tax) காலாவதியாகிவிட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவருக்கு நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் ‘மெத்தாம்பேட்டமைன்’ போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த காவல் துறை அதிகாரியின் இடது கையும் வலது காலிலும் முறிவு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவர் ராஜா பெருமாள் பைனூன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 44(1)-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடமையில் இருக்கும் காவல்துறையினரின் உத்தரவுகளுக்குப் பொதுமக்கள் கீழ்ப்படிய வேண்டும் என்றும், மற்ற வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் காவல் துறை எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here