அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்: மனிதர்களைப் பிரிய மனமில்லாமல் 200 கி.மீ நீந்தி தீவிற்கு மீண்டும் திரும்பிய கடல் நாய் …

பெய்ஜிங், சீனாவில் மனிதர்களின் அன்பிற்கு பழகிய கடல் நாய் ஒன்று, ஆழ்கடலில் விடப்பட்ட பிறகும் மனிதர்களைப் பிரிந்திருக்க முடியாமல் 200 கிலோமீட்டர் தூரம் நீந்தி மீண்டும் தீவிற்கே திரும்பிய நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாசப் போராட்டம்

சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள தசாங்ஷான் தீவில் கடந்த ஏப்ரல் மாதம் காயங்களுடன் மீட்கப்பட்ட 5 கடல் நாய்களில் ‘நானா’ என்ற 2 வயது புள்ளி கடல் நாயும் ஒன்று. அங்குள்ள மக்களால் பல மாதங்கள் அன்போடு பராமரிக்கப்பட்ட இந்த கடல் நாய், கடந்த 7-ந்தேதி அன்று முழுமையாக குணமடைந்ததைத் தொடர்ந்து ஆழ்கடலில் மறுவாழ்விற்காக விடுவிக்கப்பட்டது.

200 கி.மீ நீந்திய விநோதம்

ஆனால், அங்கு வாழ விரும்பாத ‘நானா’, மனிதர்களைத் தேடி கடந்த 13-ந்தேதி அன்று சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து மீண்டும் அதே தசாங்ஷான் தீவின் கரைக்கே திரும்பி வந்து சேர்ந்தது. அதன் உடலில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கண்காணிப்பு கருவி மூலம் அது 200 கி.மீ தூரம் நீந்தி வந்ததை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தினர்.

நீண்ட தூரப் பயணத்தால் மிகவும் இளைத்துக் காணப்பட்ட அந்த கடல் நாய்க்கு உள்ளூர் மீனவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உணவளித்து மீண்டும் அரவணைத்துக் கொண்டனர். சீனாவில் முதல் தர பாதுகாக்கப்பட்ட உயிரினங்களின் பட்டியலில் இருக்கும் இந்த புள்ளி கடல் நாயின் பாசப் போராட்டம், உலகெங்கும் உள்ள விலங்கு பிரியர்களை நெகிழச் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here