இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் சிக்கிய கை: 19 வயது ஓராங் அஸ்லி வாலிபருக்கு நேர்ந்த கொடூர விபத்து!

ஈப்போ:

பெர்ச்சாம் இலகு தொழில் பேட்டையில் உள்ள கோழிப் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த 19 வயது ஓராங் அஸ்லி வாலிபரின் வலது கை இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் சிக்கிக்கொண்ட பயங்கரச் சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மாலை 4.41 மணியளவில் அவசர அழைப்பு பெறப்பட்டதாகப் பேராக் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) உதவி செயல்பாட்டு இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமட் தெரிவித்தார். மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, அந்த இளைஞர் நனவு நிலையில் கடுமையான வலியுடன் தவித்துக்கொண்டிருந்தார்.

“மீட்பு நடவடிக்கையின் போது இளைஞர் அனுபவித்த கடுமையான வலியைக் குறைக்க, சம்பவ இடத்தில் இருந்த சுகாதார அமைச்சின் (KKM) மருத்துவக் குழுவின் உதவியுடன் அவரது கைக்கு மயக்க மருந்து (Anesthesia) செலுத்தப்பட்டது. அதன் பிறகு ‘SAVER’ மீட்புக் கொள்கையைப் பயன்படுத்தி கையை வெளியே எடுக்க முயற்சிய மேற்கொள்ளப்பட்டது” என்று, பேராக் JBPM உதவி செயல்பாட்டு இயக்குநர்சபரோட்ஸி நோர் அகமட் கூறினார்.

தீயணைப்பு வீரர்கள் ‘Cutter Spreader’ எனும் சிறப்பு வெட்டு உபகரணங்களைப் பயன்படுத்தி இயந்திரத்தைப் பிரித்து, அதன் பிளேடு பகுதி வரை வெட்டினர். இருப்பினும், அந்தப் பகுதி வலுவான துருப்பிடிக்காத எஃகு உலோகம் என்பதால் கையை உடனடியாக வெளியே எடுக்க முடியவில்லை.

அதேவேளையில், காயம் அடைந்த இளைஞரின் உடல்நிலை படிப்படியாகப் பலவீனமடையத் தொடங்கியதைத் தொடர்ந்து, KKM மருத்துவக் குழுவுடன் கலந்தாலோசித்து, இயந்திரப் பகுதியோடு சேர்த்து அவர் உடனடியாக ராஜா பேர்மைசூரி பைனூன் மருத்துவமனைக்கு மேலதிக அவசர சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here