துபாயில் மீண்டும் கனமழை; விமானங்கள் ரத்து; பயணிகள் கடும் அவதி!

துபாயில் மீண்டும் இடி மின்னலுடன் கூடிய கனமழை துவங்கியதால், மோசமான வானிலை காரணமாக ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு அமிரேட்ஸ் நாடுகளின் தலைநகர் துபாயில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இதனால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு துபாய், அபுதாபி, ஷார்ஜா போன்ற நகரங்கள் மழை நீரில் மூழ்கியது. சாலைகள் மழை நீரில் மூழ்கியதால், வாகனங்கள் தண்ணீரில் மிதந்து சென்றன. இந்த வெள்ளத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்ததோடு, நூற்றுக்கும் மேற்பட்ட ஒட்டகங்களும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தன.

கனமழை காரணமாக துபாய் விமான நிலையம் இரண்டு நாட்கள் முழுவதுமாக மூடப்பட்டு, உள்நாட்டுக்கு வருகின்ற விமானங்கள் பிற நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இதனால் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டிருந்தது.

கடந்த சில நாட்களாக மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில், மீண்டும் துபாயை புயல் ஒன்று தாக்கியுள்ளது. நேற்று இரவு இந்த புயல் காரணமாக மிதமான மழை பெய்த நிலையில், இன்று காலை முதல் மீண்டும் மழை வலுக்கத் துவங்கியுள்ளது. துபாய் மற்றும் அதன் அருகில் உள்ள முக்கிய நகரங்களிலும் கடுமையான மழைப்பொழிவு இருந்து வருவதால் மோசமான வானிலை நிலவி வருகிறது.

இதனால் சர்வதேச விமான நிலையமான துபாய்க்கு வந்து செல்லும் விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. இதன் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மாறிவரும் பருவநிலை காரணமாக இந்த திடீர் கனமழை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், மழை பாதிப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here