சிவப்பு விளக்கில் நின்றிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து: 19 வயது மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

கோலாலம்பூர்:

சுபாங்கிலுள்ள ஜாலான் USJ 1 பகுதியில் இன்று காலை நடைபெற்ற 5 வாகனங்கள் சம்பந்தப்பட்ட தொடர் வீதி விபத்தில், ஆசிய பசிபிக் பல்கலைக்கழகத்தின் (APU) 19 வயது வெளிநாட்டு மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த மற்றொரு மாணவர் படுகாயமடைந்தார்.

இன்று காலை மணி 6.34 அளவிலான இச்சம்பவத்தில், 29 வயது உள்ளூர் ஆடவர் ஓட்டி வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, இரண்டு மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பெர்சியாரான் சுபாங் மேவாவிலிருந்து எதுமெட்ரோ (Edumetro) நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, சிக்னலின் சிவப்பு விளக்கில் நின்றிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. அத்துடன், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் மற்றும் முன்னால் இருந்த மேலும் இரு வாகனங்கள் மீதும் மோதி விபத்துக்குள்ளானது” என்று, சுபாங் ஜெயா மாவட்டக் காவல் துறைத் தலைவர் அசிஸ்டென் கமிஷனர் வான் அஸ்லான் வான் மாமட் கூறினார்.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மாணவர் படுகாயமடைந்த நிலையில், பின்னால் அமர்ந்து பயணித்த 19 வயது வெளிநாட்டு மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த மற்றும் காயமடைந்த இருவருமே ஆசிய பசிபிக் பல்கலைக்கழகத்தில் (APU) பயின்று வந்த மாணவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

காயமடைந்தவர் சிகிச்சைக்காகவும், உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகவும் ஷா ஆலாம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here