கோலாலம்பூர்:
சபா, செம்பூர்ணாவில் உள்ள பிரசித்தி பெற்ற பாம் பாம் தீவு கடற்பகுதியில் ஆழ்கடல் மேற்பரப்பு நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 66 வயது சீன நாட்டுப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
சீனாவின் யுன்னான் மாகாணத்தைச் சேர்ந்த அம்மாது, நேற்று (அக்டோபர் 4) பிற்பகல் 12.30 மணியளவில் தனது குடும்பத்தினருடன் நீரில் நீந்திக் கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாகச் செம்பூர்ணா மாவட்ட போலிஸ் தலைவர் சுப்ரிண்டண்டன் டான் ஹியாப் வா தெரிவித்தார்.
“நீரில் நீந்திக் கொண்டிருந்த போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறிய அந்தப் பெண், உடனடியாகப் படகிற்குத் திரும்ப உதவி கேட்டுள்ளார். படகில் ஏறிய சிறிது நேரத்திலேயே அவர் சுயநினைவை இழந்தார். அவருக்கு உடனடியாக முதலுதவி (CPR) அளிக்கப்பட்ட போதிலும் எவ்வித அசைவும் இல்லாததால், அவர் செம்பூர்ணா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்” என்று வர மேலும் கூறினார்.
மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பரிசோதித்த மருத்துவர்கள், அப்பெண் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த மூதாட்டி கடந்த 10 ஆண்டுகளாக ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து போலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், கடல் சார்ந்த பொழுதுபோக்கு நடவடிக்கைகளின் போது சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைச் சுற்றுலா அமைப்பாளர்கள் முழுமையாக உறுதி செய்ய வேண்டும் என போலிஸ் தரப்பு அறிவுறுத்தியுள்ளது.
















