(ரெ. மாலினி)
மலாக்கா:
மலாக்கா ராயா (Portbeat Logs) கடற்கரையோரப் பகுதியில் சுமார் 10,000 சதுர அடி பரப்பளவில், கஜீபோ (Gazebo) வடிவிலான மூன்று கூடாரங்களைக் கொண்ட இந்து இறுதிச்சடங்கு மையம் அமைக்கப்படவுள்ளது.
இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
இத்திட்டத்திற்காக மாநில அரசாங்கம் RM100,000 நிதியுதவி வழங்குகிறது. இது அரசியல் அல்லது தேர்தல் பின்னணியில் பார்க்கப்பட வேண்டிய திட்டம் அல்ல என்றும், இந்து சமுதாயத்தின் நீண்டநாள் கனவாகவும் தேவையாகவும் இருந்த ஒரு திட்டத்தை நிறைவேற்றும் முயற்சியே என்றும் வி.பி. சண்முகம் தெரிவித்தார்.
இந்த இடம் மலாக்கா இந்துச் சங்கத்தின் பராமரிப்பில் இயங்கும் என்றும், இந்த மையம் இந்து இறுதிச்சடங்குகளுக்கு மட்டுமின்றி, பிற இனத்தவரும் பயன்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் திட்டப் பணிகள் தொடங்கும் என்றும், மாநில அரசாங்கம் ஒதுக்கியுள்ள நிதியின் மூலம் மலாக்கா நகராண்மைக் கழகத்தால் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, திட்டம் முழுமையாக நிறைவு செய்யப்படும் என்றும் டத்தோ சண்முகம் தெரிவித்தார்.
கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டுதான் நிறைவடையும் என்பதால், அதுவரை தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் இந்த இடத்தையே இறுதிச்சடங்குகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும் அவர் கூறினார்.
இத்திட்டம் சிறப்பாக நிறைவேறுவதற்கு தமிழ் ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் அனைத்து சமூகங்களைச் சேர்ந்த சகோதரர்களும் தங்களது முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மலாக்கா இந்து சமூகத்தின் நீண்டநாள் தேவையை நிறைவேற்றும் முக்கியமான சமூகநலத் திட்டமாக இந்த இறுதிச்சடங்கு மையம் அமையவுள்ளது.
இதனிடையே, அடிக்கல் நாட்டு விழாவில் தேசிய ம.இ.கா.வின் உதவித் தலைவர் டத்தோ முருகையா, தேசியத் தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரனின் பிரதிநிதியாக கலந்து கொண்டார்.























