புதுடெல்லி: மருத்துவ விளம்பரங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொய்யான தகவல்களை உருவாக்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குத் தேசிய மருத்துவ ஆணையம் தடை விதித்துள்ளது. மருத்துவர்களும் மருத்துவமனைகளும் விளம்பரங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக நோயாளிகளைக் கவரும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் வகையில், புதிய நெறிமுறை வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நோயாளிகள் கூறியதாகப் போலியான கருத்துகள், சிகிச்சை முடிவுகள் மற்றும் பரிந்துரைகளை உருவாக்கக் கூடாது என்று புதிய வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட சிகிச்சை மூலம் 100 சதவீதம் குணமடையலாம் என்றும், ஒரு மருத்துவர்தான் சிறந்தவர் அல்லது நம்பர் ஒன் மருத்துவர் என்றும் ஆதாரமற்ற விளம்பரங்களை வெளியிடவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.














