புகைமூட்டம் காரணமாகப் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டதைத் தொடர்ந்து, ஜோகூரில் 30%-க்கும் குறைவான தொடக்கப்பள்ளி மாணவர்களே இணையவழிப் பாடங்களில் பங்கேற்று வருவதாகப் பெற்றோர் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. இணையவழிப் பாடங்களைப் பின்பற்றும் 70% இடைநிலைப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், தொடக்கப்பள்ளி மாணவர்களின் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது என்று ஜோகூர் மாநில தனியார் பள்ளி பெற்றோர் மற்றும் சமூக ஈடுபாட்டுச் சங்கத்தின் (Persatuan Penglibatan Ibu Bapa dan Komuniti Swasta Negeri Johor) தலைவர் யஹ்யா ஜாஃபர் கூறினார்.
வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் வீட்டில் போதிய மின்னணு சாதனங்கள் மற்றும் வழிகாட்டுதல் இல்லாமை ஆகியவை தொடக்கப்பள்ளி மாணவர்களின் இந்தக்குறைந்த பங்கேற்பிற்குக் காரணமென யஹ்யா சுட்டிக்காட்டியதாக ‘உத்துசான் மலேசியா’ (Utusan Malaysia) செய்தி வெளியிட்டுள்ளது. புகைமூட்டம் நீடித்தால் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படலாம் என்றும், குறிப்பாக இந்த ஆண்டு ‘சிஜில் பெலஜரன் மலேசியா’ (SPM) தேர்வை எழுதவுள்ள மாணவர்கள் இதனால் பாதிக்கப்படலாம் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில், பெற்றோர்கள் பெரும்பாலும் வீட்டிலேயே இருந்ததால், தங்கள் பிள்ளைகள் இணையவழிப் பாடங்களைப் பின்பற்றுவதற்கு உதவ முடிந்தது. ஆனால் தற்போதைய நிலைமை வேறுபட்டது; பல பெற்றோர்கள் தொடர்ந்து வேலைக்குச் செல்வதால், தங்கள் பிள்ளைகளை நேரடியாகக் கண்காணிக்க முடியாத சூழலில் உள்ளனர் என்று அவர் கூறினார்.
வகுப்பறையில் இருக்கும்போது அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற நிபந்தனையுடன் பள்ளிகளை மீண்டும் திறக்கலாம் என்று யஹ்யா பரிந்துரைத்தார். புகைமூட்டத்தின் பாதிப்பைக் குறைக்க, மாணவர்கள் திறந்தவெளி இடங்களுக்குச் செல்வதையும் கட்டுப்படுத்தலாம் என்று அவர் கூறினார். விடுதி வசதி கொண்ட பள்ளிகளைப் பொறுத்தவரை, மாணவர் தங்கும் அறைகளிலேயே (dormitories) பாடங்களை நடத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.















