தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றுவது நம் மரபு. யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும், சொத்துகள் சேரும். அனைத்து விதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும். மஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு நமது முன்னோர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு மஹாளய அமாவாசை அன்று திதி கொடுக்கிறோம். அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “யம தீபம்” மட்டுமே. அந்த தீபத்தை தீபாவளி காலத்தில் வருகிற திரயோதஸி திதியில் ஏற்ற வேண்டும்.
ஐப்பசி மாத வளர்பிறை துவிதியை யமத் துவிதியை என்றழைக்கப்படுகிறது. யமத் துவிதியை அன்றுதான் யமதர்மராஜன் தனது சகோதரி வீட்டிற்கு சென்று உணவருந்தி சகோதரியை ஆசீர்வதித்த நாளாகும். சகோதரியின் அழைப்பின் பேரில் சகோதரியின் வீட்டிற்கு சென்று வாழை இலையில் உணவு அருந்தி பரிசுகளைப் பரிமாறிக் கொண்டு அசீர்வாதம் செய்தால் சகோதர சகோதரிகளின் அன்பு என்றும் நிலைத்திருக்கும். சகோதரனுக்கு தீர்க்காயுளும் சகோதரிக்கு தீர்க்காயுளுடன் தீர்க்க சுமங்கலி யோகமும் உண்டாகும் என எமதர்மராஜன் கூறுகிறார்.
| யம தீபம் 2026 தேதி | நவம்பர் 06 வெள்ளி |
| திரயோதசி திதி துவக்கம் | நவம்பர் 06 காலை 11.59 |
| திரயோதசி திதி நிறைவு | நவம்பர் 07 காலை 11.44 |
| யம தீபம் ஏற்ற நேரம் | மாலை 05.30 – 06.30 |
– ஒரு மண் அகல் விளக்கை பயன்படுத்தி யம தீபம் ஏற்ற வேண்டும். வட மாநிலங்களில் கோதுமை மாவால் செய்யப்பட்ட விளக்குகளை ஏற்றுவார்கள்.
– நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி இட்டு ஒரே ஒரு விளக்கு மட்டும் ஏற்ற வேண்டும்.
– வீட்டின் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும்.
– யம தீபத்தை தெற்கு நோக்கி வைக்க வேண்டும்.
– வீட்டின் வெளிப்புறம், அதாவது வாசற்படிக்கு வெளியே அல்லது மாடியில் இந்த யம தீபத்தை ஏற்றலாம்.
– யம தீபம் ஏற்றும் போது, ” எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் நோய்கள், துயரங்கள் மற்றும் அகால மரணத்தில் இருந்து காப்பாற்றி, நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியம் அருள வேண்டும்” என மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
– விளக்கை ஏற்றிய பின், அதைத் திரும்பிப் பார்க்கக் கூடாது; அது தானாக எரியும் வரை விட வேண்டும்.
– விளக்கு ஏற்ற பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தையுமே வீட்டிற்குள் மீண்டும் எடுத்து சென்று பயன்படுத்தக் கூடாது.
– விளக்கு ஏற்றும் போது பின்புறமாக நின்று தான் ஏற்ற வேண்டும். மற்றவர்களும் விளக்கிற்கு முன்புறம் நிற்கக் கூடாது. விளக்கை எடுப்பதாக இருந்தாலும் பின்புறம் இருந்தே எடுக்க வேண்டும்.
– கர்ப்பிணிகள், உடலில் வலி உள்ளவர்கள், நோய் உள்ளவர்கள், காயம் உள்ளவர்கள், புதிதாக திருமணமானவர்கள் கண்டிப்பாக ஏற்றக் கூடாது.






















