கோல்கீப்பருடன் மோதி மைதானத்தில் பலியான ஸ்பெயின் வீரர்

ஸ்பெயினில் உள்ள எஸ்டாடியோ ஹெலியோடோரோ ரோட்ரிக்ஸ் லோபஸ் மைதானத்தில் டெனெரிப் மற்றும் எஃப்சி அண்டோரா அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பாகச் சென்ற இந்தப் போட்டியின் ஆட்ட நேர இறுதிப் பகுதியில், இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. அப்பொழுது நீண்ட தூரப் பந்தைக் கைப்பற்ற ஜீசஸ் டி மிகுவல் வேகமாக ஓடிவந்தார்.

அப்போது அண்டோரா அணியின் கோல்கீப்பர் ஜீசஸ் ஒவோனோ, பந்தைத் தடுப்பதற்காக தனது பெட்டிப் பகுதிக்கு வெளியே அவசரமாக ஓடிவந்து மோதினார். எதிர்பாராதவிதமாக கோல்கீப்பரின் முழங்கால் டி மிகுவலின் நெஞ்சில் பலமாக மோதியது. இதனால் மைதானத்திலேயே அவர் சுருண்டு விழுந்து மயங்கினார். உடனடியாக மைதானத்திற்குள் நுழைந்த மருத்துவக் குழுவினர் அவருக்கு ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக தீவிர முதலுதவி அளித்தனர். இந்த கோர மோதலுக்காக கோல்கீப்பருக்கு நேரடி சிவப்பு அட்டை வழங்கப்பட்டு போட்டி பாதியிலேயே கைவிடப்பட்டது.

மைதானத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், டி மிகுவலுக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவக் குழுவினர் மேற்கொண்டதீவிர முயற்சியால் அவரது நாடித்துடிப்பு மீண்டும் மீட்கப்பட்டு, உடனடியாக அவசர ஊர்தி மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்குத் தொடர் சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும், மார்பகப் பகுதியில் ஏற்பட்ட பலத்த தாக்கம் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட இதயச் செயலிழப்பு காரணமாக அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டின் போது வீரர்களின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகி உள்ளதை இந்தச் சம்பவம் மீண்டும் வெளிச்சத்திற்குப் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, மார்பகப் பகுதியில் ஏற்படும் திடீர் மற்றும் கடுமையான தாக்கங்கள் இதயத்துடிப்பை முற்றிலும் நிறுத்திவிடும் ஆபத்தான ‘கமோஷியோ கார்டிஸ்’ போன்ற மருத்துவ நிலைக்கு இது காரணமாகியிருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர். மறைந்த ஜீசஸ் டி மிகுவலின் மறைவுக்கு ரியல் மாட்ரிட், பார்சிலோனா உள்ளிட்ட ஸ்பெயினின் முன்னணி கால்பந்து கிளப் அமைப்புகளும், ஏராளமான வீரர்களும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here