ரூ.200 கோடி மோசடி வழக்கில் நடிகை நோரா பதேகிக்கு மீண்டும் சம்மன்…

டெல்லி, பாலிவுட் நடிகை நோரா பதேகி, சுகேஷ் சந்திரசேகர் தொடர்பான ரூ.200 கோடி மோசடி வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவரிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லி நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

நவம்பர் 2-ல் ஆஜராகாத நோரா பதேகி
டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இந்த வழக்கு நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அன்றைய தினம் சாட்சியாக ஆஜராக நோரா பதேகிக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, நோரா பதேகியின் வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி மனு தாக்கல் செய்தனர். குறுகிய கால அவகாசத்தில் சம்மன் கிடைத்ததாலும், ஏற்கெனவே ஒப்புக்கொண்ட தொழில்முறை பணிகள் இருந்ததாலும் அவரால் ஆஜராக முடியவில்லை என்று விளக்கம் அளித்தனர்.

இதனால் அதிருப்தி தெரிவித்த நீதிபதி, சாட்சியாக ஆஜராக வேண்டியவர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தை அலட்சியமாகக் கருதக்கூடாது என்றும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நவம்பர் 6-ம் தேதி மீண்டும் சம்மன்
இதனைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையை நவம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அன்றைய தினம் ஆஜராகும்படி நோரா பதேகிக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

இதற்கிடையே, நோரா பதேகியின் சட்டக் குழுவினர் வெளியிட்ட விளக்கத்தில், அவர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் அல்ல என்றும், எந்தவொரு குற்றத்திலும் அவருக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற விசாரணைக்கு உதவும் வகையில் சாட்சியாக மட்டுமே அவர் அழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

ரூ.200 கோடி மோசடி வழக்கின் பின்னணி
டெல்லி ரோகிணி சிறையில் இருந்தபோது, அரசு அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்து, முன்னாள் ரான்பாக்ஸி நிறுவன அதிபர் ஷிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதி சிங்கிடம் இருந்து சுமார் ரூ.200 கோடி பணம் பறித்ததாக சுகேஷ் சந்திரசேகர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி லீனா மரியா பால் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேகி உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here