“சுப்ரீம்கோர்ட்டு கிளையை தமிழகத்தில் அமைக்க வேண்டும்”: பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம்…

சென்னை, இந்திய சுப்ரீம்கோர்ட்டின் கிளையை சென்னையில் அமைத்திட தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய், தமிழ்நாடு மாநிலத்தின் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றான, சுப்ரீம்கோர்ட்டின் கிளையை சென்னையில் அமைத்திட தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், பின்வரும் காரணங்களைக் கருத்தில் கொண்டு, இக்கோரிக்கை 1980-ஆம் ஆண்டிலேயே மாநில அரசால் முன்வைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்:-

(a) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 130, ”சுப்ரீம்கோர்ட்டு டெல்லியிலோ அல்லது ஜனாதிபதியின் ஒப்புதலுடன் இந்தியத் தலைமை நீதிபதி அவ்வப்போது முடிவுசெய்யும் பிற இடத்திலோ அல்லது இடங்களிலோ அமைந்திருக்க வழிவகை செய்கிறது”.

(b) இக்கோரிக்கையானது, 1979-ஆம் ஆண்டு நடைபெற்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டின் ஒரு விவாதப் பொருளாகவும் இருந்தது.

(c) தென்னிந்தியாவில் உள்ள வழக்காடிகள் தங்கள் நீதிசார் தீர்வுகளுக்காக புதுடெல்லி வரை செல்ல வேண்டியுள்ளது.

(d) தென்னிந்தியாவின் முக்கிய பெருநகரமாக விளங்கும் சென்னையில், இக்கிளையை அமைப்பது, அனைத்து தென்மாநிலங்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக அமையும்.

(e) சென்னை ஐகோர்ட்டின் வழக்குரைஞர் குழுமமானது, மிக்க சட்ட அறிவும், வாதத்திறமையும் கொண்ட சட்ட வல்லுநர்களைக் கொண்டுள்ளதால், சென்னையில் அமைக்கப்படும் சுப்ரீம்கோர்ட்டு கிளையின் தேவைகளை நிறைவு செய்யும்.

(f) சென்னை ஐகோர்ட்டானது 1862-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட நாட்டின் மிகத் தொன்மையான முன்னுரிமை ஐகோர்ட்டுகளில் ஒன்றானது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்கடிதத்தில், சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகளின் பதவித் தரத்திற்கு இணையான குடியிருப்பு வசதிகள் உள்ளிட்ட தேவையான அனைத்துக் கட்டமைப்பு வசதிகளையும் தவறாமல் மாநில அரசு வழங்கும் என உறுதியளித்திருந்த நிலையிலும், 07.08.2007 அன்று சுப்ரீம்கோர்ட்டின் முழு அமர்வு இப்பொருண்மை குறித்த தனது

முந்தைய தீர்மானங்களிலிருந்து மாறுபடுவதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என முடிவெடுத்துள்ள நிலையையும், நமது அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டபோது, ஏழை-பணக்காரர் என்ற பாகுபாடின்றி நாட்டின் அனைத்துக் குடிமக்களும் நீதிமன்றத்தை நேரடியாக அணுகும் வாய்ப்பைப் பெறவேண்டும் என்றே அதனை உருவாக்கிய சான்றோர்கள் விரும்பினர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பல நாடுகளில் இல்லாத சிறப்பம்சமான அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 32 இயற்றப்பட்டதற்கான முதன்மைக் காரணமும் இதுவே எனவும், நாளடைவில், பிரிவு 32-ன்கீழான தீர்வானது, புவியியல் ரீதியாக இந்திய சுப்ரீம்கோர்ட்டிற்கு அருகில் வசிக்கக்கூடியவர்கள் மற்றும் வழக்குச் செலவுகளையும், பயணச் செலவுகளையும் பொருட்டாகக் கருதாதவர்களுக்கு மட்டுமே நடைமுறையில் சாத்தியமான ஒன்றாக மாறியுள்ளது என்றும், இதனால், குறிப்பாகத் தென்னிந்தியாவில் உள்ள குடிமக்கள் இச்சலுகையைப் பெறும் வாய்ப்பை புதுடெல்லிக்கும், தென்னிந்திய மாநிலங்களுக்கும் இடையே உள்ள நெடுந்தொலைவு காரணமாகவே இழக்க நேரிடுகிறது என்பனவற்றையும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here