தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நீண்ட விடுமுறையில் சொந்த ஊர்களுக்கும் சுற்றுலாத் தலங்களுக்கும் செல்லத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள், தங்களது வீடுகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காவல்துறையின் தன்னார்வ ஸ்மார்ட்போன் ரோந்து (Volunteer Smartphone Patrol – VSP) செயலியைப் பயன்படுத்துமாறு ஜோகூர் மாநில காவல்துறை தலைவர் டத்தோ அப் ரஹாமான் அர்சாட் கேட்டுக்கொண்டுள்ளார். எதிர்வரும் நவம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், நீண்ட வார இறுதி விடுமுறையைப் பயன்படுத்தி ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல குடியிருப்புகள் ஆள்நடமாட்டமின்றி இருக்கும் சூழ்நிலை உருவாகக்கூடும் என்பதால், வீடுகளின் பாதுகாப்பில் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இன்று புதன்கிழமை ஜோகூர் பாரு நகரில் நடைபெற்ற தீபாவளி சந்தையைப் பார்வையிட்டபோது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்கள் வெளியூர் செல்லும் விவரங்களை முன்கூட்டியே காவல்துறைக்குத் தெரிவிப்பதன் மூலம் குற்றச்செயல்களைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த முடியும் என்றார். காவல்துறையால் உருவாக்கப்பட்ட VSP செயலியின் வாயிலாக, பொதுமக்கள் தங்களது வீடுகளைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் தகவல்களைப் பதிவு செய்யலாம். அவ்வாறு பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் காவல்துறையினர் கண்காணிப்பு மற்றும் குற்றத்தடுப்பு ரோந்து நடவடிக்கைகளைத் திட்டமிட்டு மேற்கொள்ள முடியும் என அவர் விளக்கினார்.
மேலும், சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம், குற்றச்சம்பவங்கள் உள்ளிட்ட தகவல்களையும் இச்செயலியின் மூலம் காவல்துறையின் கவனத்திற்குக் கொண்டு வர முடியும். அவசரகாலச் சூழ்நிலைகளில் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் அனுப்புவதற்கான அவசர எச்சரிக்கை வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கைப்பேசி பயனர்கள் முறையே கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவற்றிலிருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இதனிடையே, நடப்பாண்டு ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் வீடுகளைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்வது தொடர்பாக VSP செயலியில் மொத்தம் 5,294 பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 4,425 பதிவுகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், இவ்வாண்டு கூடுதலாக 869 பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. இது ஏறத்தாழ 20 விழுக்காடு அதிகரிப்பைக் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும், ஜோகூர் மாநிலத்தின் மக்கள்தொகை ஏறத்தாழ 40 இலட்சமாக உள்ளதைக் கருத்தில் கொள்ளும்போது, இந்தச் செயலியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இன்னும் குறைவாகவே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். எனவே, பண்டிகைக் காலங்களில் வீடுகளைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் பொதுமக்கள், காவல்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் VSP செயலியைப் பயன்படுத்த முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே, தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு நவம்பர் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை ஜோகூர் மாநிலம் முழுவதும் ‘ஒப்ஸ் சஹாயா’ (Ops Cahaya) என்ற சிறப்பு காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் டத்தோ அப் ரஹாமான் தெரிவித்தார். இந்தச் சிறப்பு நடவடிக்கையில் மொத்தம் 1,781 காவல்துறை அதிகாரிகளும் உறுப்பினர்களும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
குற்றச்செயல்களைத் தடுப்பதுடன், பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் வாகனப் போக்குவரத்தைச் சீரமைப்பது, சாலை விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்வது ஆகியவற்றுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்றார். குறிப்பாக, வாகன நெரிசல் அதிகமாக ஏற்படக்கூடிய முக்கியச் சாலைகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு காவல்துறையின் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என அவர் கூறினார். தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடுவதற்கு ஏதுவாக, மாநிலம் முழுவதும் குற்றத்தடுப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறை நடவடிக்கைகள் ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ளப்படும் என ஜோகூர் மாநில காவல்துறை தலைவர் டத்தோ அப் ரஹாமான் அர்சாட் தெரிவித்தார்.
கோகி கருணாநிதி















