தற்கொலை செய்ய முயன்ற பெண்ணை காப்பாற்றிய முதலை…

மங்களூரு, சாக நினைத்து ஆற்றில் குதித்த பெண்ணை, முதலை கடித்ததால் ‘மரண பயம்’ வந்து கத்தியதையடுத்து பொதுமக்கள் அவரை பத்திரமாக மீட்ட வினோத சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவிலுக்கு வந்த குடும்பம்
கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்தவர் ரேகா (வயது 38). இவருக்கு திருமணமாகி குடும்பம் உள்ளது. இந்த நிலையில், ரேகா தனது குடும்பத்தினருடன் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள குக்கே சுப்ரமண்யா கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தார்.

குடும்ப தகராறு
அப்போது, கோவிலுக்கு அருகில் ரேகாவுக்கும், அவருடைய கணவருக்கும் இடையே திடீரென கடுமையான குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ரேகா, வாழ்க்கையில் விரக்தியடைந்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.

ஆற்றில் குதித்தார்
இதையடுத்து, புதன்கிழமை இரவு அங்கிருந்த குமாரதாரா பாலத்தின் மீது ஏறிய ரேகா, திடீரென ஆற்றுக்குள் குதித்தார். இரவு நேரம் என்பதால் ஆற்றில் வெள்ளம் இருண்டு காணப்பட்டது. அவர் ஆற்றில் விழுந்த சில நிமிடங்களிலேயே, அங்கு மறைந்திருந்த ஒரு முதலை ரேகாவை நோக்கி பாய்ந்து வந்து, அவரது கடித்தது. சாக வேண்டும் என்று ஆற்றில் குதித்த ரேகாவுக்கு, முதலையின் பல் பட்டு ரத்தம் வந்ததும், திடீரென மரண பயம் தொற்றிக்கொண்டது.

காப்பாற்றுங்கள்… அலறல் சத்தம்
முதலையின் பிடியில் இருந்து தப்பிக்க போராடிய அவர், “காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்…” என்று கத்தியிருக்கிறார். ஆற்றுப்பகுதியில் இருந்து நள்ளிரவில் கேட்ட பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்டு, அருகில் இருந்த தனியார் விடுதி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர்.

பத்திரமாக மீட்பு
உடனே அவர்கள் சுப்ரமண்யா போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், பொதுமக்களும் சேர்ந்து ஆற்றுக்குள் கற்களை வீசி முதலையை விரட்டியடித்தனர். பின்னர், ஆற்றில் தத்தளித்துக்கொண்டிருந்த ரேகாவை கயிற்றின் உதவியோடு பத்திரமாக மீட்டனர்.

சிகிச்சை
சின்ன முதலை என்பதால் லேசான காயத்துடன் தப்பினார் என்று தட்சிண கன்னடா எஸ்.பி. அருண் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, கவுன்சிலிங் கொடுத்து குடும்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டார். வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

தற்கொலை செய்ய ஆற்றில் குதித்த பெண், முதலை கடித்ததால் அலறி, பொதுமக்கள் மூலம் உயிர் பிழைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here