ரவாங், புரூட் வேலி (Fruit Valley) பகுதியில், 32ஆவது மைல் கல்லுக்கு அருகில் அமைந்துள்ள ஜாலான் பத்து ஆராங் – ஈஜோக் சாலை, வியாழக்கிழமை (நவம்பர் 5) ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, அனைத்து வாகனப் போக்குவரத்திற்கும் இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளது. கோம்பாக் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி இப்ராஹிம் ஹுசின் கூறுகையில், இந்தச் சம்பவம் குறித்த தகவல் தங்களுக்கு இரவு 11 மணியளவில் கிடைத்ததாகத் தெரிவித்தார்.
காவல்துறையினரும் பத்து ஆராங் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும் சம்பவ இடத்தில் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மேல் மற்றும் கீழ் சரிவுகள் சரிந்ததாலும், சாலை அமைப்பின் ஒரு பகுதி சேதமடைந்ததாலும் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இந்தச் சரிவினால், ஈஜோக்கிலிருந்து ரவாங் செல்லும் பாதை போக்குவரத்திற்குப் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளதால், சாலையின் இரு திசைகளும் மூடப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று அவர் சனிக்கிழமை (நவம்பர் 7) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அஇந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். சம்பவத்திற்கான துல்லியமான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














