சென்னை,
தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் நடிப்பில் உருவான ‘ராமாயணா’ திரைப்படம், வெளியான நான்கே நாட்களில் உலகளவில் இந்திய மதிப்பில் ரூ.499.20 கோடி வசூலித்து திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரபல இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராமாயணா: பாகம் 1’ திரைப்படம் கடந்த நவம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
இதில் ரன்பீர் கபூர் ராமராகவும், தமிழ் நடிகை சாய் பல்லவி சீதையாகவும், கன்னட நடிகர் யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். மேலும் சன்னி தியோல், ரவி துபே உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரைப்பட வசூல் விவரங்களை வெளியிடும் Sacnilk இணையத்தளத்தின் மதிப்பீட்டின்படி, இப்படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் ரூ.64.85 கோடி நிகர வசூலைப் பதிவு செய்துள்ளது. இரண்டாவது நாளில் ரூ.48.05 கோடியும், மூன்றாவது நாளில் ரூ.69.80 கோடியும், நான்காவது நாளில் ரூ.56.15 கோடியும் வசூலித்துள்ளது.
இதன்மூலம் முதல் நான்கு நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.238.85 கோடி நிகர வசூலையும், ரூ.285.20 கோடி மொத்த வசூலையும் பெற்றுள்ளது.
அதேவேளையில், வெளிநாடுகளில் ரூ.214 கோடி வசூலித்துள்ள இப்படத்தின் உலகளாவிய மொத்த வசூல் ரூ.499.20 கோடியை எட்டியுள்ளது.
குறிப்பாக தீபாவளி விடுமுறை நாட்களில் திரையரங்குகளுக்கு ரசிகர்கள் அதிகளவில் வருகை தந்தமை படத்தின் வசூலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகத் திரைப்பட வர்த்தகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகியுள்ள இப்படம், இந்தியாவைத் தாண்டி வெளிநாட்டுத் திரையரங்குகளிலும் குறிப்பிடத்தக்க வசூலைப் பதிவு செய்துள்ளது.
பிரம்மாண்டமான காட்சியமைப்புகள், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படம், இந்த ஆண்டின் அதிகம் பேசப்படும் இந்தியத் திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
இதனிடையே, உலகளாவிய வசூலில் ரூ.500 கோடி என்ற முக்கிய மைல்கல்லை எட்டுவதற்கு மிக அருகில் உள்ள இப்படத்தின் அடுத்தடுத்த நாட்களின் வசூல் நிலவரம் குறித்தும் திரையுலகில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
‘ராமாயணா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.





















