சிரம்பான்,
மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலம், நீலாய் சுங்கச்சாவடி அருகே ஓடிக்கொண்டிருந்த காரின் பின்புறக் கதவைப் பிடித்தபடி சென்ற சிறுவன் ஒருவர் வீதியில் விழுந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது.
சுமார் ஒரு நிமிடம் நீளமான குறித்த காணொளியில், நகர்ந்து கொண்டிருந்த காரின் பின்புறக் கதவைப் பிடித்தபடி சென்ற சிறுவன் திடீரென வீதியில் விழும் காட்சி பதிவாகியுள்ளது. மற்றுமொரு வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த டேஷ்கேமரா மூலம் இந்தக் காட்சி பதிவாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இதுகுறித்து நேற்று இரவு 11.02 மணியளவில் போலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்ததாக நீலாய் மாவட்ட போலிஸ் தலைவர் ஜொஹாரி யஹ்யா தெரிவித்துள்ளார்.
காணொளியைப் பதிவு செய்ததாக நம்பப்படும் பெண் வாகன உரிமையாளரிடம் வாக்குமூலம் பெறுவதற்கும் அசல் காணொளியைச்வழங்குமாறும் போலிஸார் தொடர்புகொண்டுள்ளனர். எனினும், அவரிடமிருந்து இதுவரை பதில் கிடைக்கவில்லை. அந்தப் பெண் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட தகவலின்படி, சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து அருகிலுள்ள வாகனத் திருப்புமுனை வெகுதொலைவில் இருந்ததால், சிறுவனின் குடும்பத்தினர் அவரை அழைத்துச் செல்வதற்காக நடந்தே திரும்பி வந்ததாக நம்பப்படுகிறது.
இந்நிலையில், சம்பவத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காகச் சிறுவனையும் அவரது குடும்பத்தினரையும் அடையாளம் காணும் நடவடிக்கைகளில் போலிஸார் ஈடுபட்டுள்ளனர். சிறுவனின் தற்போதைய நிலை தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை. குழந்தைகளைத் துன்புறுத்துதல், புறக்கணித்தல் அல்லது ஆபத்துக்கு உள்ளாக்குதல் தொடர்பான 2001ஆம் ஆண்டு சிறுவர் சட்டத்தின் 31(1)(a) பிரிவின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.























