கோலாலம்பூர்:
டி.ஏ.பி பொதுச்செயலாளர் அந்தோணி லோக் சியூ ஃபூக் மலேசிய போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலகியது “வேதனையான” முடிவாக இருந்தாலும், கொள்கைகளின் அடிப்படையில் பொறுப்பேற்கும் அவரது மனப்பான்மையையே இது பிரதிபலிக்கிறது என பினாங்கு பக்காத்தான் ஹராப்பான் (PH) தலைவரும் முதலமைச்சருமான சாவ் கொன் இயோவ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பை (வீட்டுக்காவலில் தண்டனையை அனுபவிக்க அனுமதித்தது) தொடர்ந்து எழுந்த பொதுமக்களின் விவாதங்களுக்கு மத்தியில், கடந்த நவம்பர் 10ஆம் திகதி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அந்தோணி லோக் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இது தொடர்பில் இன்று (நவம்பர் 12) ஜோர்ஜ்டவுனில் கருத்து வெளியிட்ட சாவ் கொன் இயோவ், “அந்தோணி லோக்கின் இராஜினாமாவை எங்களுக்கு வேதனை அளிக்கும் ஒரு முடிவாகவே நான் பார்க்கிறேன். ஏனெனில், இன்னும் விவாதிக்கப்பட்டு தீர்க்கப்படாமல் இருக்கும் ஒரு விவகாரத்திற்காகவே அவர் இம்முடிவை எடுத்துள்ளார்” எனக் குறிப்பிட்டார். தனது சொந்த நலன்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், நாட்டின் நலனையும் மக்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பதற்கான முக்கிய செய்தியை வெளிப்படுத்தவே அவர் இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அந்தோணி லோக்கின் இந்த இராஜினாமா முடிவுக்கு டி.ஏ.பி மத்திய செயற்குழு (CEC) முழு ஆதரவு வழங்கியுள்ளது. எதிர்வரும் அரசியல் சவால்களை எதிர்கொள்வது மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சித் தலைமை தொடர்ந்து ஆலோசித்து விவேகமான முடிவை எடுக்கும் என்றும் சாவ் கொன் இயோவ் மேலும் தெரிவித்தார்.























