கோலாலம்பூர்,
சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மாலை 318 குடும்பங்களைச் சேர்ந்த 1,144 பேர் தங்கியிருந்த நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி 338 குடும்பங்களைச் சேர்ந்த 1,248 பேராக அதிகரித்துள்ளது.
சிலாங்கூரில் செயல்பட்டு வரும் ஏழு தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக சமூக நலத்துறையின் InfoBencana இணையத்தளம் தெரிவித்துள்ளது. டத்தோ மகாராஜா லேலா தேசியப் பள்ளியில் 393 பேரும், பாரிட் மஹாங் தேசியப் பள்ளியில் 318 பேரும், புக்கிட் கூச்சிங் சமயப் பள்ளியில் 281 பேரும் தங்கியுள்ளனர். மேலும், காஃபா இன்டெக்ராசி ஹிதாயாவில் 122 பேரும், பத்து 8 ஈஜோக் சமயப் பள்ளியில் 71 பேரும், தஞ்சோங் சியாம் சமூக மண்டபத்தில் 50 பேரும், ஹுலு பெர்னாம் பொதுமண்டபத்தில் 13 பேரும் தங்கியுள்ளனர்.
இதனிடையே, பேராக் மாநிலத்தின் ஹிலிர் பேராக் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. நேற்று மாலை 87 குடும்பங்களைச் சேர்ந்த 301 பேர் நிவாரண மையங்களில் தங்கியிருந்த நிலையில், இன்று காலை 83 குடும்பங்களைச் சேர்ந்த 288 பேராகக் குறைந்துள்ளது.
மேலும், புக்கிட் மேரா நீர்த்தேக்கப் பகுதியில் சுங்கை குராவ் ஆற்றின் நீர்மட்டம் 9.14 மீட்டரை எட்டி எச்சரிக்கை நிலையை அடைந்துள்ளதாக நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை தெரிவித்துள்ளது. பேராக் மாநிலத்தின் பல மாவட்டங்களில் இன்று பிற்பகல் மற்றும் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வுத்துறை முன்னறிவித்துள்ளது.























