போர்ட்டிக்சன் – செர்மின் கடல் பகுதியில் தென்பட்ட முதலை

போர்ட்டிக்சன் செர்மின் கடல்பகுதியில் நேற்று முன்தினம் தொடங்கி ஒரு முதலை தென்பட்டிருக்கிறது. ஆகவே அங்கு செல்லும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என நெகிரி செம்பிலான் தேசிய வனவிலங்கு பாதுகாப்புத் துறை இயக்குநர் பைசால் இஷாம் பிக்ரி ஆலோசனைக் கூறினார். முதலை தென்பட்டிருப்பதால் பொதுமக்கள் அவசியம் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அவர் சொன்னார். நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் செர்மின் கடல்பகுதியில் மங்கி பே எனுமிடத்தில் முதலை தென்பட்டதாக தகவல்  கிடைத்திருக்கிறது என்றார் அவர்.

இதனையடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். சுமார் 2 மீட்டர் நீளம் கொண்ட  முதலை அங்கிருந்த கடலில் மிதந்து வந்தது தெரிய வந்தது. சுமார் 5 மீட்டர் தூரத்திற்கு அது சென்றதை பொதுமக்கள் பார்த்தனர். ஆனால் அந்த முதலை மீண்டும் மீண்டும் அந்தக் கடல் பகுதிக்கு வருவது தெரிய வருகிறது. கடல் நீர் உள்வாங்கும்போது அந்த முதலையை தெளிவாக பார்க்க முடிகிறது. சம்பந்தப்பட்ட அந்த கடல்பகுதியில் கண்காணிப்புகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். பிரச்சினை ஏதும் இல்லையென்றால் முதலையைப் பிடிக்க சதுப்பு நிலப்பகுதியில் பொறி வைக்கப்படும்.

இரவு நேரத்தில் அந்த முதலை அங்கு நடமாடுவது தெரிய வருகிறது. அந்த கடல் பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பிற்கும் குடும்பத்தாரின் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஒரு வேளை முதலையைப் பார்க்க நேர்ந்தால் அதற்கு தொல்லை தராமல் வனவிலங்கு பாதுகாப்புத் துறைக்குத் தகவல் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here