அதிகாரத்தில் இருப்பவர்கள் உண்மையை மறைக்கக்கூடாது! மக்களின் குறைகளை ஆட்சியாளரிடம் எடுத்துச் செல்ல வேண்டும் – பேராக் சுல்தான் வலியுறுத்தல்!

கோலா கங்சார், 

அரசாங்கப் பதவிகளில் இருப்பவர்கள் தனிப்பட்ட நலன்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், நேர்மையுடனும் பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் எனப் பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷா வலியுறுத்தியுள்ளார்.

மக்களின் குரல்களும் குறைகளும் ஆட்சியாளரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும், அதிகாரத்தில் இருப்பவர்கள் உண்மைகளை மறைத்து ஆட்சியாளரைத் தவறான நம்பிக்கையில் வைத்திருக்கக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பேராக் சுல்தானின் 70ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற விசுவாச உறுதிமொழி மற்றும் மாநில விருதுகள் வழங்கும் விழாவில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரண்மனைக்கு நெருக்கமாகப் பணியாற்றும் உயரதிகாரிகள், உண்மை கசப்பாக இருந்தாலும் அதனைத் துணிச்சலுடன் எடுத்துரைக்க வேண்டும். மக்களின் பிரச்சினைகள் ஆட்சியாளரிடம் சென்றடைவதை உறுதிசெய்வதே அவர்களின் முக்கியப் பொறுப்பாகும் எனச் சுல்தான் நஸ்ரின் ஷா குறிப்பிட்டார்.

மேலும், அதிகாரம் என்பது தனிப்பட்ட சலுகைகளை அனுபவிப்பதற்கான வாய்ப்பு அல்ல என்றும், நீதி, நேர்மை மற்றும் மக்களின் நலனைப் பாதுகாப்பதற்கான பெரும் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

ஊழலை நிராகரிக்கும் துணிச்சல், உண்மையைப் பேசும் மனப்பான்மை, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கும் உறுதி ஆகியவை தலைமைத்துவத்தின் அடிப்படைப் பண்புகளாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

பேராக் சுல்தானகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க Cura Si Manja Kini வாள் மற்றும் Taming Sari கிரிஸ் ஆகிய அரச மரபுச் சின்னங்களைச் சுட்டிக்காட்டிய அவர், அவை வெறும் பாரம்பரிய அடையாளங்கள் மட்டுமல்ல; நீதி, துணிச்சல் மற்றும் பொறுப்புணர்வை நினைவூட்டும் சின்னங்கள் என்றும் விளக்கினார்.

செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து வரும் காலத்திலும், வரலாற்று அடையாளங்களையும் மனிதநேய விழுமியங்களையும் பாதுகாப்பது அவசியம் எனச் சுல்தான் நஸ்ரின் ஷா வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here