குளுவாங்,
மலாக்கா மாநிலத் தேர்தலில் ஜனநாயக செயல் கட்சி (DAP) போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப்பது, பல்வேறு இனங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அக்கட்சியின் துணைத் தலைவர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.
ஜொகூர் மாநிலம் குளுவாங்கில் நடைபெற்ற DAP கட்சியின் வருடாந்திர மாநாட்டில் உரையாற்றிய அவர், குறிப்பாகப் பல இன மக்கள் வசிக்கும் ஆயர் கெரோ தொகுதியில் கிடைத்த வெற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்டார்.
அந்தத் தொகுதியில் DAP கடும் சவால்களை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், கட்சியின் தொடர்ச்சியான மக்கள் சேவையும் தேர்தல் பணிக்குழுவினரின் கடின உழைப்பும் வெற்றிக்கு வழிவகுத்ததாக அவர் தெரிவித்தார்.
மக்களுக்கான அர்ப்பணிப்பான சேவையும் தொடர் உழைப்பும் தேர்தல் தொடர்பான ஆரம்பக்கட்டக் கணிப்புகளை மாற்றியமைக்க முடியும் என்பதை இந்த முடிவுகள் நிரூபித்துள்ளதாகவும் தியோ நீ சிங் கூறினார்.
மேலும், மலாக்கா தேர்தல் பிரசாரத்திற்காக ஜொகூரிலிருந்து சென்று பணியாற்றிய DAP தலைவர்கள், கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற மலாக்கா மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் 21 தொகுதிகளையும், பெரிக்காத்தான் நேஷனல் 3 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன.
இதனிடையே, பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிட்ட DAP, ஆயர் கெரோ, கெசிடாங், கோத்தா லக்சமணா மற்றும் பண்டார் ஹிலிர் ஆகிய நான்கு தொகுதிகளையும் தக்கவைத்துக்கொண்டுள்ளது.




















