தொழில்துறைப் பொறியியல் படிப்பு: இந்திய மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள்!

UTAR பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டு பட்டப்படிப்பு – பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு!

கோலாலம்பூர், 

நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப உற்பத்தித்திறன், தரம், செயல்திறன் மற்றும் தொழில் நிர்வாகத்தை மேம்படுத்துவதில் தொழில்துறைப் பொறியியல் (Industrial Engineering) முக்கியப் பங்கு வகித்து வருகிறது.

குறிப்பாக, தொழிற்சாலைகளில் உற்பத்திச் செலவுகளைக் குறைத்தல், வளங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்துதல், உற்பத்தித் தரத்தை உயர்த்துதல் மற்றும் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்குதல் ஆகியவற்றில் இத்துறை முக்கியத்துவம் பெறுகிறது.

மலேசியாவின் பேராக் மாநிலம், கம்பார் நகரில் அமைந்துள்ள துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் (UTAR) தொழில்துறைப் பொறியியலுக்கான நான்கு ஆண்டு இளங்கலைப் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.

மலேசியப் பொறியாளர்கள் வாரியத்தின் (Board of Engineers Malaysia) முழுமையான அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இப்பட்டப்படிப்பில், உற்பத்தி அமைப்புகள், தரப்பொறியியல், செயல்பாட்டு மேலாண்மை, விநியோகச் சங்கிலி மேலாண்மை, கணினி வழி வடிவமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பப் பாடங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், மாணவர்கள் மூன்று மாதத் தொழில்துறைப் பயிற்சியை மேற்கொள்வதுடன், இறுதியாண்டில் நடைமுறைத் திட்டப்பணிகள் மற்றும் ஆய்வுப் பணிகளிலும் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளைப் பெறுகின்றனர். இப்பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்கள் உற்பத்தித் தொழிற்சாலைகள், தரக் கட்டுப்பாடு, தளவாட மேலாண்மை, வாகன உற்பத்தி, மின்னணுத் தொழில், மருத்துவமனைகள், உணவு மற்றும் மருந்து உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற முடியும்.

எதிர்காலத் தொழில்துறை வளர்ச்சிக்கு ஏற்ப மாணவர்களின் தொழில்நுட்ப அறிவு, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திறன் மற்றும் நிர்வாகத் திறனை மேம்படுத்துவதற்கு இப்பட்டப்படிப்பு உதவும்.

இப்பட்டப்படிப்பு தொடர்பான மேலதிக விவரங்களை https://study.utar.edu.my/industrial-engineering.php என்ற இணையத்தளத்தில் அறிந்துகொள்ளலாம்.

தகவல்: முனைவர் உதயசூரியன் சுப்ரமணியம், துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகம், கம்பார், பேராக்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here