மலேசியாவில் ஊழல் சாதாரணமாகிவிட்டது! 64 விழுக்காட்டினர் கருத்து – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

கோலாலம்பூர், 

மலேசியாவில் ஊழல் என்பது அன்றாட வாழ்க்கையில் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டதாக 64 விழுக்காட்டு மக்கள் கருதுவதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மெர்டேக்கா மையம் நடத்திய 2026ஆம் ஆண்டுக்கான ஊழல் குறித்த மக்கள் கருத்துக் கணிப்பில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 64 விழுக்காட்டினர் ஊழல் சாதாரணமாகிவிட்டதாகக் கூறியுள்ளனர். 26 விழுக்காட்டினர் இந்தக் கருத்தை மறுத்துள்ள நிலையில், 8 விழுக்காட்டினர் நடுநிலையான கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

ஊழல் சாதாரணமாகிவிட்டதாகக் கருதுபவர்களில் 60 விழுக்காட்டினர், அது எப்போதும் தவறான செயல் என்று தெரிவித்துள்ளனர். அதேவேளை, 28 விழுக்காட்டினர் ஊழலைத் தவிர்க்க முடியாது என்றும், 12 விழுக்காட்டினர் சில நேரங்களில் அது அவசியமாகிறது என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, 21 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களில் 73 விழுக்காட்டினர் ஊழல் எப்போதும் தவறானது என்று கூறியுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 53 விழுக்காட்டினர் இதே கருத்தைக் கொண்டுள்ளனர்.

மேலும், நாட்டில் ஊழல் ஒரு கடுமையான பிரச்சினையாக இருப்பதாக 67 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். 22 விழுக்காட்டினர் ஓரளவு கடுமையான பிரச்சினை என்றும், 10 விழுக்காட்டினர் பெரிய பிரச்சினை இல்லை என்றும் கூறியுள்ளனர்.

பல்வேறு துறைகளில் ஊழல் குறித்த மக்களின் கருத்துகளும் இந்த ஆய்வில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, போலீஸ் மற்றும் சுங்கத்துறை உள்ளிட்ட சட்ட அமலாக்க அதிகாரிகளிடையே ஊழல் அதிகமாக இருப்பதாக 48 விழுக்காட்டினர் கருதுகின்றனர்.

அடுத்ததாக அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் குறித்து 42 விழுக்காட்டினரும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து 36 விழுக்காட்டினரும், உள்ளாட்சி அதிகாரிகள் குறித்து 35 விழுக்காட்டினரும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

அலையன்ஸ் ஆளுமை மையத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, மார்ச் 12 முதல் ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.

மலேசியாவின் 14 மாநிலங்களிலும் உள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட 1,209 பேர் இதில் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here