பெட்டாலிங் ஜெயா:
கோதுமை மாவுக்கான அரசாங்க மானியம் இந்த ஆண்டுடன் நிறுத்தப்படுவதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவீன துறை அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி தெரிவித்தார்.
மானிய விலை கோதுமை மாவு உற்பத்தியைத் அரசாங்கத்தினால் தொடர முடியாது, ஏனெனில் விலைவாசி உயர்வு காரணமாக உற்பத்தியாளர்களால் ஒரு கிலோவுக்கு RM1.45 என்ற கட்டுப்பாட்டு விலையில் உற்பத்தி செய்ய முடியாதுள்ளது என்று அவர் கூறினார்.
உதாரணமாக ” 26 அக்டோபர் 2013 முதல் சர்க்கரைக்கு மானியம் வழங்குவதை அரசாங்கம் நிறுத்திக்கொண்டது, அதன் பின்னர், வெளிநாட்டவர்கள் உட்பட அனைத்து மலேசியர்களுக்கும் செல்லுபடியாகும் விலைக் கட்டுப்பாட்டின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளைச் சர்க்கரையின் விலை கட்டுப்படுத்தப்பட்டது,” என்று அவர் நேற்று மக்களவையில் கூறினார்.
சர்க்கரை, மாவு, பெட்ரோல் மற்றும் பிற அரசாங்க மானியப் பொருட்களை வெளிநாட்டினர் எப்போது பெற முடியும் என்று, மன்ட்ஸ்ரி நசிப்பின் (BN-தெங்கரா) கேட்ட கேள்விக்கு அவர் மேற்கூறியவாறு பதிலளித்தார்.
இதற்கிடையில், “அதிகரித்து வரும் பொருட்களின் விலையின் தாக்கத்தை சமாளிக்க, மானிய டீசல் கட்டுப்பாட்டு அமைப்பு (SKDS 2.0) மூலம் டீசலுக்கான மானியத்தை அரசாங்கம் செயல்படுத்துகிறது” என்று அவர் மேற்கோள் காட்டினார்.
மேலும், நாடு முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் வெளிநாட்டு உரிமத் தகடுகளைக் கொண்ட வாகனங்களுக்கு RON95 பெட்ரோல் விற்பனையை அரசாங்கம் தடை செய்துள்ளது என்று அவர் சொன்னார்.
வெளிநாட்டு உரிமத் தகடுகளைக் கொண்ட வாகனங்கள் பெட்ரோல் நிலையங்களில் RON97 பெட்ரோலை மட்டுமே நிரப்ப முடியும், அதே சமயம் சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து எல்லையிலிருந்து 50 கீலோமீட்டர்களிலும், இந்தோனேசியாவின் எல்லை மற்றும் புருனேயில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள பெட்ரோல் நிலையங்களுக்கு மானிய விலையில் டீசல் 20 லிட்டருக்கு மிகாமல் மட்டுமே அவர்கள் நிரப்ப முடியும் என்று அவர் கூறினார்.



















