இந்தியாவின் முதல் பறவைக் காய்ச்சல் தடுப்பு மருந்து: நாளை மறுநாள் நாட்டிற்கு அர்ப்பணிப்பு…

புதுடெல்லி, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் பறவைக் காய்ச்சல் (எச்5என்1) தடுப்பு மருந்தை, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மந்திரி சிவ்ராஜ் சிங் சௌகான் நாளை மறுநாள் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

பறவைக் காய்ச்சல் தடுப்பு மருந்து
பறவைக் காய்ச்சல் எனப்படும் ‘ஹைலி பேதோஜெனிக் ஏவியன் இன்ப்ளுயன்சா’ (எச்பிஏஐ) நோயால் கோழிப்பண்ணைகள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதனை தடுக்கும் வகையில், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஐசிஏஆர் – தேசிய உயர்பாதுகாப்பு விலங்கு நோய் தடுப்பு நிறுவனம் (என்ஐஎச்எஸ்ஏடி) உள்நாட்டிலேயே புதிய தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.

கிளேட் 2.3.2.1ஏ
‘எச்5என்1’ வைரஸின் ‘கிளேட் 2.3.2.1ஏ’ வகைக்கு எதிராக இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள முதலாவது தடுப்பு மருந்து இதுவாகும். இந்த மருந்தை மத்திய மந்திரி சிவ்ராஜ் சிங் சௌகான், போபாலில் உள்ள தேசிய உயர்பாதுகாப்பு விலங்கு நோய் தடுப்பு நிறுவனத்தில் நடைபெறும் விழாவில் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

நிதி இழப்பு
பறவைக் காய்ச்சல் பரவும்போது, பாதிக்கப்பட்ட பறவைகளில் சுமார் 100 சதவீதம் வரை இறப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் கோழிகளை பெருமளவில் அழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதுடன், வர்த்தக தடைகளால் பண்ணை உரிமையாளர்களுக்கு பெரும் நிதி இழப்பும் ஏற்படுகிறது.

ஜிடிபி வளர்ச்சி
இந்தியாவில் 2006-ம் ஆண்டு இந்நோய் கண்டறியப்பட்டதிலிருந்து இதுவரை 500-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்நோய் தீவிரமாக பரவினால் நாட்டின் ஒட்டுமொத்த கோழிகளின் எண்ணிக்கையில் 20 சதவீதத்திற்கும் மேல் பாதிக்கப்படும் என்பதோடு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சியும் 1.5 சதவீதம் வரை குறையக்கூடும்.

தற்போது உள்நாட்டிலேயே தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டு இருப்பதன் மூலம் கோழிப்பண்ணை உரிமையாளர்களும், விவசாயிகளும் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here