கார்த்திகை மாதம் சிவபெருமான், ஜோதி பிளம்பாக காட்சி அளித்த மாதம் என்பதால் இறைவனை ஜோதி வடிவமாக வழிபடுவதற்குரிய மாதமாகும். கார்த்திகை மாதத்தில் விளக்கேற்றி வழிபடுவது மிகவும் புண்ணியமான வழிபாடாக பார்க்கப்படுகிறது. கார்த்திகை மாதம் முழுவதும் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் வீட்டின் நிலைவாசலில் மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, தீபம் ஏற்றி வழிபடுவது பெரும்பாலான வீடுகளில் வழக்கமாக உள்ளது.
அப்படி வழக்கம் இல்லாதவர்கள் கூட திருக்கார்த்திகை தீபத்திருநாள் துவங்கி, அடுத்து வரும் 3 அல்லது 5 நாட்களுக்கு வீடு முழுவதும் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். பொதுவாகவே கார்த்திகை மாதம் முழுவதும் நிலைவாசல், பூஜை அறை, துளசி மாடம் ஆகிய இடங்களில் ஒரே ஒரு அகல் விளக்காவது ஏற்றி வைப்பது நல்லது என பெரியவர்கள் சொல்லுவது உண்டு. கார்த்திகை மாதம் முழுவதும் வீட்டின் நிலை வாசலில் தீபம் ஏற்றி வைத்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்.
நிலைவாசலில் தீபம் ஏற்றுவதன் பலன்கள் :
1. மகாலட்சுமி கடாட்சம்:
நிலைவாசலின் இருபுறமும் இரண்டு அகல் விளக்குகள் ஏற்றுவது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, மகாலட்சுமி மற்றும் குலதெய்வத்தின் அருளால் செல்வப் பெருக்கு உண்டாகும். வீட்டில் மங்கலமும், தெய்வீக அருளும் அதிகரிக்கும்.
2. பணக் கஷ்டம் நீங்கும்:
இந்த மாதத்தில் நிலைவாசலில் விளக்கேற்றி மனதார வேண்டிக் கொள்ள, குடும்பத்தில் உள்ள வறுமையும் பணக் கஷ்டங்களும் நீங்கி பொருளாதார வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
3. யாகத்திற்கு நிகரான பலன்:
கார்த்திகை மாதம் முழுவதும் மாலையில் விளக்கேற்றி வழிபடுவது, அக்னி பகவான் மூலமாக இறைவனுக்கு அவிரீபாகம் அளிக்கும் பெரும் யாகம் செய்ததற்குக் நிகரான புண்ணியத்தைத் தரும்.
4. தீய எண்ணங்கள் விலகல்:
இருளை நீக்கி ஒளியை வரவேற்பதன் அடையாளமாக இந்த தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இது வீட்டிற்குள்ளும், மனதிலும் உள்ள தீய எண்ணங்களையும் இருளையும் போக்கும்.
5. அறிவியல், ஆரோக்கிய பலன்:
குளிர்காலத்தின் தொடக்க மாதமான கார்த்திகையில் வாசலில் விளக்கேற்றுவதால், அங்கிருக்கும் கிருமிகள் அழிகின்றன.






















