செபராங் பிராயில் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் கைது ; RM355,785 மதிப்புள்ள 142.3 கிலோ கஞ்சா பறிமுதல்

புக்கிட் மெர்தாஜாம், டிசம்பர் 24 :

செபராங் பிராய் தெங்கா (SPT) ஐச் சுற்றி போலீசார் மேற்கொண்ட ஆறு சோதனைகளில் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, RM355,785 மதிப்புள்ள 142.3 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

செபராங் பிராய் தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஷாபீ அப்துல் சமட் இதுபற்றிக் கூறுகையில், கடந்த மாதம் முதல் கண்காணிப்பு மற்றும் உளவுத்துறையின் தகவல் அடிப்படையில், 30 முதல் 52 வயதுடைய சந்தேக நபர்கள் டிசம்பர் 17 முதல் டிசம்பர் 22 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

“டிசம்பர் 17 அன்று மாலை 4.30 மணியளவில் செபராங் ஜெயாவில் உள்ள ஒரு வீட்டில் முதல் சோதனை நடத்தப்பட்டது. அங்கு ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் RM12,907.50 மதிப்புள்ள 5.2 கிலோ எடையுள்ள ஆறு சுருக்கப்பட்ட கஞ்சா பொதிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இரண்டாவது நடவடிக்கை புக்கிட் மெர்தாஜாமில் உள்ள மற்றொரு குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்டது. அங்கு RM47,197.50 மதிப்புள்ள 18.9 கிலோ எடையுள்ள 20 கஞ்சா பொதிகளை போலீசார் கைப்பற்றியதுடன், இருவரை கைது செய்தனர்.

அதனைத்தொடர்ந்து சுங்கை செமம்பு பகுதியில் உள்ள மற்றொரு கடையில் சோதனை நடத்தினர், இது போதைப்பொருள் விற்பனை கடையாக உள்ளது, அங்கு 39.6 கிலோ எடையுள்ள கஞ்சா( RM122.950 மதிப்புள்ளவை) கைப்பற்றப்பட்டன, ”என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பின்னர் செபராங் ஜெயாவில் உள்ள ஒரு வீட்டில் மற்றொரு நபரைக் கைது செய்த போலீசார், RM2,750 மதிப்புள்ள 1.1 கிலோ எடையுள்ள 53 சிறிய கஞ்சாப் பொட்டலங்களைக் கைப்பற்றியதாகவும், பெர்மாடாங் பாவில் உள்ள மற்றொரு வீட்டைச் சோதனை செய்வதற்கு முன், 54.6 கிலோ (RM136.442.50) எடையுள்ள கஞ்சா பொதிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பெர்மாடாங் பாவ் என்ற இடத்தில் கடைசிச் சோதனை நடந்ததாகவும், இதன் போது RM57,363 மதிப்புள்ள 23 கிலோ கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபர் போதைப்பொருள் வழங்குவதற்காக வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருப்பதாக நம்பப்பட்டபோது கைது செய்யப்பட்டார் என்று ஷாபி கூறினார்.

ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் ஐந்து சந்தேக நபர்களும் ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here