கெடா தீவிபத்தில் நெஞ்சை உலுக்கும் சோகம்: கட்டியணைத்த நிலையில் உடல் கருகி உயிரிழந்த 2 குழந்தைகள்!

கெடா:

கெடா மாநிலம் சிக், கம்போங் தெலோய் துவா பகுதியில் வீடாக மாற்றப்பட்டிருந்த அலுவலகம் ஒன்றில் இன்று (நவம்பர் 21) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், 16 மாதப் பெண் குழந்தையும், 3 வயதுடைய அவளது அண்ணனும் மெத்தையில் ஒருவரையொருவர் கட்டியணைத்த நிலையில் உடல் கருகி உயிரிழந்தனர்.

இத்துயரச் சம்பவத்தில் 3 வயதுச் சிறுவனும், 16 மாதப் பெண் குழந்தையும் பலியாகியுள்ளனர். அவர்களது முழுமையான அடையாளம் குறித்த விவரங்களை அறிய அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இன்று அதிகாலை 6.11 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்தவுடன், சிக் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் ஒரு அலுவலக அறையும், வெளிப்புறத்தில் கழிவறையும் மட்டுமே இருந்துள்ளன; அங்கு சிசிடிவி (CCTV) கேமராக்கள் பொருத்தப்படவில்லை. எனவே, விசாரணையை முன்னெடுக்க அருகிலுள்ள கட்டிடங்களின் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படவுள்ளதாக கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மண்டல 2 துணைத் தலைவர் பிரையன் டெல் புங்கியாஸ் கூறினார்.

மேலும் அருகிலுள்ள திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) சேமிப்பு மையத்திலிருந்து தீ பரவியிருக்க வாய்ப்புள்ளதா எனக் கேட்டதற்கு, அந்த மையம் சற்றுத் தொலைவில் தனி கட்டிடத்தில் உள்ளதாக அவர் தெளிவுபடுத்தினார்.

தீப்பிடித்த வளாகத்திற்குள் சமையல் நடவடிக்கைகள் ஏதேனும் நடைபெற்றதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

தீ விபத்துக்கான உண்மையான காரணம் குறித்துத் தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here