பெட்டாலிங் ஜெயா:
கட்டுப்பாட்டை இழந்த Mercedes-Benz சொகுசு கார் விபத்துக்குள்ளானதில், காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் வெளியே தூக்கி வீசப்பட்டுச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று அதிகாலை தலைநகர் கோலாலம்பூர் நோக்கிச் செல்லும் கூட்டரசு நெடுஞ்சாலையின் 34-ஆவது கிலோமீட்டரில் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில், 20 மற்றும் 30 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்களே உயிரிழந்துள்ளனர்.
“இன்று காலை 7 மணியளவில் இவ்விபத்து குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. 20 வயது மதிக்கத்தக்க உள்ளூர் ஆடவர் ஒருவர் ஓட்டி வந்த தங்க நிற மெர்சிடிஸ்-பென்ஸ் கார், திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுற ஓரத்திலுள்ள தடுப்புச் சுவரில் மோதியுள்ளது.
இதன் காரணமாகக் கார் சுழன்றதில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு பெண் பயணிகளும் காரின் பின்பக்கக் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளனர். பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.”
விபத்து நடந்தவுடன் காரை ஓட்டி வந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ள நிலையில், அவரைப் பிடிக்கக் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக இச்சம்பவம் குறித்து பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் ஷம்சுதீன் மாமாட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.
1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41(1)-இன் கீழ் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சாலை விதிகளை மீறும் எவருடனும் காவல்துறை சமரசம் செய்து கொள்ளாது என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இவ்விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் யாரேனும் இருந்தால், விசாரணைக்கு உதவுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
தகவல் தெரிந்தவர்கள் போக்குவரத்துப் புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் சிவம் முனியாண்டி (017-3290749) அல்லது பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைமையகத்தை (03-79662222) தொடர்பு கொள்ளலாம்.























