கோலாலம்பூர்:
மலேசியாவில் 61 விழுக்காட்டு மக்களிடம் அவசரத் தேவைகளைச் சமாளிப்பதற்குக் குறைந்தபட்சம் RM1,000 சேமிப்புகூட இல்லை எனத் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்துள்ளார். மலேசிய மத்திய வங்கியின் (BNM) 2024ஆம் ஆண்டு அறிக்கையை மேற்கோள்காட்டி அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், வேலை இழப்பு ஏற்பட்டால் மூன்று மாதங்களுக்கான அத்தியாவசியச் செலவுகளைச் சமாளிக்கத் தேவையான சேமிப்புத் தொகை 37 விழுக்காட்டு மக்களிடம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்பாராத நிதி நெருக்கடிகளை எதிர்கொள்வதற்குப் பெரும்பாலான மக்கள் போதிய சேமிப்பின்றி இருப்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துவதாகவும், இதனால் மக்களிடையே நிதி அறிவாற்றலை மேம்படுத்துவது மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இன்று கூச்சிங்கிலுள்ள அமானா சஹாம் நேஷனல் பெர்ஹாட் (ASNB) கிளையில் நடைபெற்ற ‘Juh Kita Melabur, Anak Sarawak’ முதலீட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதற்கிடையில், சிறுவயதிலிருந்தே பணத்தின் மதிப்பு, சேமிப்பின் அவசியம் மற்றும் முதலீட்டின் அடிப்படைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என ASNB தலைமைச் செயல் அதிகாரி ஃபட்சிஹான் அப்பாஸ் முகமட் ரம்லி தெரிவித்தார்.
மேலும், சரவாக் மக்களுக்காக ‘Juh, Melabur Menang Mas’ என்ற சிறப்பு முதலீட்டுப் பிரசாரம் நவம்பர் 1 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.
தகுதிபெறும் சரவாக் ASNB முதலீட்டாளர்கள், பிரசாரக் காலத்தில் மொத்தமாக RM5,000 நிகர முதலீடு செய்து, அதனைப் பிரசாரம் முடியும் வரை பராமரித்தால், விதிமுறைகளுக்கு உட்பட்டு அதிர்ஷ்டக் குலுக்கலில் ஒரு வாய்ப்பைப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.























