பாலி,
மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகளும் மாறுபட்ட அரசியல் நிலைப்பாடுகளும் இருந்தாலும், அவை நாட்டின் நிர்வாகத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்று துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
தேசிய முன்னணியின் தலைவருமான ஸாஹிட் ஹமிடி, நாட்டை நிர்வகிக்கும் கூட்டுப் பொறுப்பை நிறைவேற்றும்போது அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துச் செயல்படும் அளவுக்கு அரசியல் முதிர்ச்சியைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
“அரசாங்க நிர்வாகம் என்று வரும்போது எங்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைக்கின்றோம். நாட்டின் நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்கும்போது தொழில்முறை அணுகுமுறையுடன் செயல்படுகின்றோம். அதில் எங்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இல்லை” என்று இன்று இந்தோனேசியா பாலியில் வைத்து கூறியதாக செய்திகள் வெளியாகின.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமானா கட்சியின் 2026ஆம் ஆண்டுக்கான தேசிய மாநாட்டில், நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியுடன் ஒத்துழைக்காமல் போட்டியிட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஏறக்குறைய அனைத்து பேராளர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே ஸாஹிட் மேற்கண்டவாறு கூறினார்.
இருப்பினும், அமானா கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் சாபு, அந்தத் தீர்மானம் நம்பிக்கைக் கூட்டணியின் தலைமைத்துவ மன்றத்திடம் சமர்ப்பிக்கப்படவுள்ள ஒரு பரிந்துரை மட்டுமே என்றும், தேர்தல் ஒத்துழைப்பு தொடர்பான இறுதி முடிவு கூட்டணி மட்டத்திலேயே எடுக்கப்படும் என்றும் விளக்கமளித்திருந்தார்.
புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சருமான ஸாஹிட் ஹமிடி, ஐந்து நாள் அதிகாரப்பூர்வ பணிப் பயணமாக நேற்று இந்தோனேசியாவின் பாலிக்குச் சென்றார். அங்கு பல்வேறு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், இன்று ஜகார்த்தாவுக்குப் புறப்படவுள்ளார்.






















