கனமழையால் தாமான் ஸ்ரீ மூடாவில் மீண்டும் வெள்ளம்! நீரில் மூழ்கும் வாகனங்கள்!

ஷா ஆலம்:

சிலாங்கூர், ஷா ஆலாமிலுள்ள தாமான் ஸ்ரீ மூடா பகுதியில் இன்று பிற்பகல் பெய்த கனமழையைத் தொடர்ந்து, பல்வேறு சாலைகளில் வெள்ளநீர் தேங்கத் தொடங்கியுள்ளது. வர்த்தக வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் வாகன நிறுத்துமிடங்களிலும் வெள்ளநீர் புகுந்துள்ளது.

சமூக ஊடகமான Threads தளத்தில் இன்று பிற்பகல் 3.22 மணியளவில் பகிரப்பட்ட காணொளியில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல மோட்டார் சைக்கிள்கள் பாதியளவு வெள்ளநீரில் மூழ்கியிருப்பதைக் காண முடிந்தது. வெள்ளை நிற பல்நோக்கு வாகனம் (MPV) ஒன்று வெள்ளநீரைக் கடந்து செல்லும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளன.

தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகளில் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ள நிலையில், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் வாகனமோட்டிகளும் விழிப்புடன் இருக்குமாறு சமூக ஊடகப் பயனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக, இன்று பிற்பகல் 1 மணியளவில் மலேசிய வானிலை ஆய்வுத்துறை (MetMalaysia) வெளியிட்ட எச்சரிக்கையில், சிலாங்கூரின் பல்வேறு பகுதிகளில் மாலை 5 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கோலா லங்காட், செப்பாங், உலு சிலாங்கூர், கோம்பாக், உலு லங்காட், பெட்டாலிங் மற்றும் கிள்ளான் ஆகிய பகுதிகளுக்கு இந்த வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here