இரண்டு காவலர்களைத் தாக்கிய வழக்கு: சிப்பாங் நீதிமன்றத்தில் ஆஜரானார் ஏ.கே.பி.எஸ் தலைமை இயக்குநர் சுஹைலி

கோலாலம்பூர்:

இரண்டு காவல்துறை அதிகாரிகளைத் தாக்கி காயப்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கின் மறுவிசாரணைக்காக, மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு துறையின் (AKPS) தலைமை இயக்குநர் கமிஷனர் டத்தோ ஸ்ரீ முகமது சுஹைலி முகமட் ஜைன் இன்று (நவம்பர் 25) சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கருநீல நிற கோட் அணிந்திருந்த சுஹைலி, கிள்ளான் துறைமுக ஏ.கே.பி.எஸ் தளபதி துணை கமிஷனர் டத்தோ நிக் எசானி முகமட் பைசலுடன் இன்று காலை 8.20 மணியளவில் நீதிமன்ற வளாகத்திற்கு வந்தடைந்தார்.

முன்னதாக, கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி இரண்டு காவலர்களைத் தாக்கி காயப்படுத்தியதாகத் தம்மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் சுஹைலி மறுத்து, தாம் குற்றமற்றவர் என மனுத் தாக்கல் செய்திருந்தார்.

கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி பிற்பகல் 1.27 மணி முதல் 1.35 மணி வரை, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (KLIA) 1-ஆவது முனையம், 5-ஆவது தளத்திலுள்ள ‘Counter J ‘ பகுதியில் முகமட் பைஸ் சமான் (40) மற்றும் முகமட் எக்மால் சொஃப்வான் டிர்மான் (25) ஆகிய இரு காவலர்களைத் தாக்கிக் காயப்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம் பிரிவு 323-இன் கீழ் இக்குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது 2,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.
இரு குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து ஒரு நபரின் உத்தரவாதத்துடன் 3,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி அளித்திருந்ததோடு, இவ்வழக்கின் அனைத்து விசாரணைகளுக்கும் அவர் தவறாமல் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here