கோலாலம்பூர்:
கடந்த மாதம் கெந்திங் ஹைலேண்ட்ஸ் பகுதியில் தென்கொரிய நாட்டவர் ஒருவரைக் கடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், அதே நாட்டைச் சேர்ந்த மூவர் நாளை ரவூப் அமர்வு நீதிமன்றத்தில் (Raub Sessions Court) ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி, 40 வயதுடைய தென்கொரிய ஆடவர் கெந்திங் ஹைலேண்ட்ஸிலிருந்து கோலாலம்பூரில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். இது குறித்துப் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் என்று, பெந்தோங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்பிரிண்டெண்டன் ஜைஹாம் முகமட் கஹார் கூறினார்.
“ஏப்ரல் 21 அன்று மலாக்காவில் உள்ள ஒரு தங்குமிடத்தில் (Homestay) நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, 28 முதல் 40 வயதுக்குட்பட்ட மூன்று தென்கொரிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 24 அன்று கடத்தப்பட்ட நபர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.”
கைது செய்யப்பட்ட மூவர் மீதும் 1961 கடத்தல் சட்டத்தின் பிரிவு 3(1)-ன் கீழ் நாளை காலை 9 மணியளவில் குற்றம் சாட்டப்படும். இப்பிரிவின் கீழ்: குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், அல்லது சிறைத்தண்டனையுடன் பிரம்படியும் வழங்கப்பட சட்டத்தில் இடமுண்டு.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாளை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.




















