கோலா லங்காட்:
சிலாங்கூர் மாநிலம் தாமான் பந்திங் பாரு பகுதியில் உள்ள வீட்டில் தனது தாயைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 27 வயது இளைஞர் மீது தெலுக் டத்தோக் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட வேலையில்லாத 27 வயது இளைஞரான எஸ். எம். மாதவன், கடந்த நவம்பர் 13-ஆம் தேதி அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணிக்குள், தாமான் பந்திங் பாருவில் உள்ள வீட்டில் தனது 51 வயதுத் தாயாரான வி. கனகவல்லி என்பவரை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் (கொலை) கீழ் இக்குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால், குறைந்தபட்சம் 12 பிரம்படிகள் கட்டாயம் வழங்கப்படும்.
நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, பிரதி அரசுத் தரப்பு வழக்கறிஞர் முகமது அமிருல் ஷஃபிக் யாசிட் முன்னிலையானார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை (Bail) வழங்க மறுத்த நீதிமன்றம், இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 2027 ஜனவரி 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
முன்னதாக கடந்த நவம்பர் 14-ஆம் தேதி, ‘MERS 999’ அவசர அழைப்பு மூலம் இக்கொலை குறித்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட சந்தேக நபருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அவர் ‘மெத்தம்பெட்டமைன்’ (Methamphetamine) போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதி செய்யப்பட்டதாக கோல லங்காட் மாவட்ட காவல்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் முகமது அக்மல்ரிசால் ராட்சி தெரிவித்திருந்தார்.






















